இந்திய இளைஞர்களின் கனவாக இருந்த “H1B விசா” நிராகரிக்கப்படும் காரணம் என்ன?

Nov 08, 2019 08:02 AM 124

அமெரிக்காவில் பணியாற்றும் அயல் நாட்டினருக்கான ஹெச் 1பி விசாக்கள், விண்ணப்ப அளவிலேயே நிராகரிக்கப்படுவது, வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன. 

அமெரிக்காவில் பணியாற்றுவதை இலக்காகக் கொண்ட ஒவ்வொருக்கும், அதற்காகக் கிடைக்கும் மிகச் சிறந்த வாய்ப்பாக ஹெச் 1பி - விசா இருந்து வருகிறது. இந்த விசாவைப் பெற்ற ஒருவர், அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளுக்கு தங்கி பணியாற்றலாம். பின்னர், தேவைப்பட்டால் அனுமதியை இன்னும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.

அமெரிக்காவில் தொடர்ந்து 6 ஆண்டுகள் தங்கி சிறப்பாகப் பணியாற்றிய ஒருவருக்கு, அமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்கி பணியாற்றுவதற்கு உரிய 'கிரீன் கார்டு’ கிடைக்கும். இந்த சலுகைகளால், இந்திய ஐ.டி துறையினர், ஹெச் 1பி விசாவை பெரிதும் விரும்பினர். இந்தியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் இதனால் அதிகம் பலன் பெற்றனர். ஆனால் இந்த சேவை தற்போது மிகவும் கடினமாகிவிட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘அமெரிக்கப் பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களையே பணியில் அமர்த்துவோம்’ - என்ற கொள்கையைக் கொண்டுள்ளதால், ஹெச் 1பி விசாவுக்கான கெடுபிடிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. ஹெச் 1பி விசாக்களை விண்ணப்ப அளவிலேயே நிராகரிக்கும் போக்கு, அமெரிக்காவில் அதிகரித்துள்ளதை, சமீபத்தில் வெளியான அமெரிக்க கொள்கைகளுக்கான தேசிய அமைப்பின் தரவுகள் காட்டுகின்றன.

இந்த தரவுகளின்படி, விசாக்களை விண்ணப்ப அளவிலேயே நிராகரிப்பது தற்போது 24 சதவீதமாக உள்ளது. இது கடந்த 2015ஆம் ஆண்டில், வெறும் 6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 2010 முதல் 2015 வரையிலான 5 ஆண்டுகளில், நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களின் சதவீதம், ஒருபோதும் 10 சதவிகிதத்தைத் தாண்டியது இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஆனால், அமெரிக்க நிறுவனங்களின் சார்பில், ஹெச் 1பி விசாவுக்காக விண்ணப்பித்தால், அவர்களுடைய விசாக்கள் அதிகம் நிராகரிக்கப்படுவது இல்லை. அமேசான் மற்றும் இண்ட்டெல் நிறுவன ஊழியர்கள் 3 சதவீதம் வரையும், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் ஊழியர்கள் 2 சதவீதம் வரையும் மட்டுமே புறக்கணிப்பை சந்திக்கின்றனர்.

Comment

Successfully posted