குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக அறிவித்தது ஏன் ?

Feb 13, 2020 02:34 PM 351

குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக அறிவித்தது ஏன் என, அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்றப் பின்னணி தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் மற்றும் பொது வெளியில் தெரிவிக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு முறையாக கடைபிடிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குற்றப்பின்னணி உடையவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என உத்தரவிட கோரி பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நாரிமன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கடந்த நான்கு பொதுத் தேர்தல்களிலும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அதிக அளவில் போட்டியிட்டுள்ளனர் என்றும், அவர்களது குற்றப் பின்னணி குறித்த விவரங்களை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை தேர்தல் ஆணையத்திடம் 72 மணி நேரத்தில் அளிக்க வேண்டும் எனவும் அரசியல் கட்சிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comment

Successfully posted