உடைகிறதா திமுக - காங்கிரஸ் கூட்டணி..?

Jun 22, 2019 03:47 PM 1241

தண்ணீர் பிரச்னையை காரணமாகக் கூறி, திருச்சியில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திமுகவை சேர்ந்த கே.என்.நேரு, காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது?, உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு, திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி உடைந்து வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது. எப்படி? ஏன்? உடைந்தது திமுக கூட்டணி... இந்தத் தொகுப்பில் பார்ப்போம்…

1960-களில் காங்கிரஸ் கட்சியின் இந்தித் திணிப்பை எதிர்த்ததால் வளர்ந்த கட்சிதான் திமுக. பின்னர் 1975-ல் நெருக்கடி நிலைக் காலத்தின் போது திமுகவினர் பலர் காங்கிரஸ் ஏவிய காவல்துறையினரால் இறப்புக்கும், நிரந்தர உடல் பிரச்னைகளுக்கும் ஆளானார்கள். இவ்வளவும் இருந்தும் திமுகவின் ஊழல்கள் பற்றிய சர்க்காரியா கமிஷனின் அறிக்கை வெளியே வரக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக 1980-ல் திமுக தலைவர் கருணாநிதி காங்கிரசுக்கு முதல் முறையாக பல்லக்குத் தூக்க ஆரம்பித்தார். அந்தப் பல்லக்கை திமுக இன்னும் இறக்கி வைக்கவே இல்லை என்பதுதான் நிஜம்.

2009-ல் ஈழப் படுகொலைக்கு காங்கிரஸ் ஆதரவளித்த போது, அது திமுகவுக்கு கேடாக முடிந்தது. அதுவரை ஈழத் தமிழர்களின் காவலாளி என்று தன்னைக் கூறி வந்த கருணாநிதியை மக்கள் ஈழத் துரோகி என்றனர்.

2012ல் 2-ஜி ஊழல் விஸ்வரூபம் எடுத்த பொழுதும் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் திமுகவை நேரடியாக விமர்சித்தார். திமுக காங்கிரஸ் கூட்டணி இழுத்தடித்த போதெல்லாம் ரெய்டுகள் மூலம்தான் காங்கிரஸ் அதை சாதித்தது. கூடாநட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸ் உறவை திமுக தலைவர் கருணாநிதியே வர்ணித்தார்.

ஆனால் இவ்வளவு முரண்பாடும், வருத்தங்களும் இருந்தும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஆசை மட்டுமே திமுகவை காங்கிரசுடன் தொடர்ந்து பிணைத்து வைத்திருந்தது. அமைச்சர் பதவிகளுக்காக இந்திரா காந்திக்கு தூக்கிய பல்லக்கை சோனியா காந்திக்கும் தூக்கியது திமுக.

ஆனால் ராகுல் காந்திக்கும் அதே பல்லக்கை தூக்கிவதால் இப்பொது திமுகவுக்கு ஆதாயம் இல்லை, தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸால் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூடப் பெற முடியவில்லை எனும் போது திமுக இயல்பான தனது காங்கிரஸ் எதிர்ப்பை இப்போது வெளிப்படுத்துகிறது.

சில நாட்கள் முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 28 ஆண்டுகளாக வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இழந்தார். அவருக்காக ஒரு இடத்தை திமுக கொடுக்க முடியுமா என்று காங்கிரஸ் கேட்ட போது திமுக மறுத்திருக்கிறது என்று தகவல்கள் உலவுகின்றன. அதன் தொடர்ச்சியாக கே.என்.நேருவின் இந்தப் பேச்சைப் பார்க்க முடிகிறது.

திமுக என்ற திமிங்கிலத்தின் முதுகில் காங்கிரஸ் இனியும் சவாரி செய்ய முடியாது என்ற நிலையில், தமிழகத்தில் காங்கிரசின் எதிர்காலமும், தேசிய அரசியலில் திமுகவின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளன. கூடா நட்பு முடிவுக்கு வந்துவிட்டது என இதை அரசியல் பார்வையாளர்கள் வர்ணிக்கின்றனர்.

Comment

Successfully posted