ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு

Feb 19, 2020 09:33 PM 456

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கும் உயர்பதவிகளில் சம உரிமை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பதவி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களில் இதுவரை காட்டப்பட்ட பாகுபாடுகள் களையப்பட்டுள்ளன.

பாதுகாப்பு படையில் கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் பெண்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். ஆனால் துவக்கத்தில் 5 ஆண்டுகள் மட்டுமே பெண்கள்  ராணுவத்தில் பணியாற்ற அனுமதியளிக்கப்பட்டது. ஆண் அதிகாரிகளைப் போல பெண்கள் பணி நிரந்தரம் செய்யப்படாததுடன் அவர்களுக்கு கட்டளையிடுதல் பணி போன்ற பதவி கிடைக்காத சூழலும் நிலவி வந்தது.   இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் ராணுவத்தின் கல்வி, சமிக்ஞைகள், புலனாய்வு மற்றும் பொறியியல் பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஆண் அதிகாரிகளைப் போல பெண்களையும் எஸ்.எஸ்.சி வாயிலாகவே நியமிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.  இதனையடுத்து பெண்களின் பதவிக் காலம் 10 ஆண்டுகள் முதல் 14  ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டது

ஆண் அதிகாரிகள் 10 வருடங்கள் பணியில் இருந்தாலே பணி நிரந்தரம் செய்யப்பட்ட நிலையில் பெண் அதிகாரிகள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்தனர். மத்திய அரசின் சட்டப்படி  20 வருடங்கள் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என்பதால் ஓய்வூதியமும் கிடைக்க இயலா சூழல் நிலவியது.இந்தப் பாகுபாடை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆண் அதிகாரிகளைப் போல பெண்களுக்கும் பதவி உயர்வும் பணி நிரந்தமும் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பெண்களின் உடல் ரீதியான பிரச்சனைகளை முன்வைத்ததற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக மத்திய அரசு அடுத்த 3 மாதங்களுக்குள் கொள்கை முடிவுகளை வகுக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மற்றொரு புறம் ராணுவ ரீதியான பிரச்சனைகள் குறித்து கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. 13 லட்சம் படைவீரர்களுடன் இயங்கி வரும் இந்திய ராணுவத்தில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.  இந்த உத்தரவின் மூலம் தற்போது பணியில் உள்ள 600 பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் பணி நிரந்தரமும் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பணியமர்த்தப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு ஆண் அதிகாரிகளைப் போன்ற பயிற்சிகள் வழங்கப்படாதால் பணி மூப்பு அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது சிக்கல் ஏற்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.

போர்களத்தில் பணியாற்றும் ராணுவத்தின் பிரிவுகளான காலட்படை, போர்தளவாடங்கள் உள்ளிட்டப் பிரிவுகளின் பெண்களை அனுமதிப்பது அரசின் கொள்கை முடிவு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. போர்களத்தில் பணியாற்றும் பெண்கள் பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட வாய்ப்பிருப்பதால் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தை பொறுத்தவரை 70 சதவீதம் வரைபோர்களங்களில் யுத்தம் செய்யும் படைப்பிரிவினரே காணப்படுகின்றனர். விமானப்படையின் சரக்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களில் பெண்கள் படிப்படியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 1653 பெண்கள் தரைப்படையிலும், 1905 பேர் விமானப்படையிலும் 490 பேர் கடற்படையிலும் பணியாற்றி வருகின்றனர்.  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் பெண்கள் அதிகளவு சேர்ந்து பணியாற்ற வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted