சாலையில் இறந்த கிடந்த நாயின் இறைச்சியை சாப்பிட்ட தொழிலாளி !

May 22, 2020 08:04 PM 1933

ஊரடங்கு காரணமாக பசியால் வாடும் ஏழை தொழிலாளி ஒருவர் நெடுஞ்சாலையில் வாகனத்தில் அடிப்பட்டு இறந்த நாயின் இறைச்சியை உண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வேலை இழந்த கூலித் தொழிலாளர்கள் உண்ண உணவு இன்றி தங்க இடமும் இன்றி தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சாலை வழியாக செல்பவர்கள் வாகனங்களில் அடிப்பட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஷாபுரா என்ற இடத்தில் சாலையில் அடிப்பட்டு இறந்து கிடந்த நாயின் இறைச்சியை பசியின் காரணமாக ஏழைத் தொழிலாளி ஒருவர் எடுத்து உண்டார். இந்த காட்சியை அந்த வழியாக சென்ற ஜெய்ப்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் பார்த்துள்ளார். அதனை வீடியோ பதிவு செய்த அவர், அந்த நபரிடம் சாலையின் நடுவே அமர்ந்திருந்தால் வாகனங்களில் அடிப்பட்டு இறக்க நேரிடும் என எச்சரித்ததுடன் அவரை சாலையோரம் வரவழைத்து உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நருகா, வெளிமாநில தொழிலாளர்களின் அவல நிலையை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டுமென்பதற்காக பதிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted