உலகளாவிய அகதிகள் தினம் இன்று அனுசரிப்பு

Jun 20, 2019 09:46 AM 107

உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு காரணங்களுக்காக எல்லையை கடக்கும் அகதிகளுக்கென, உலக அகதிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக வன்முறையும் அடக்குமுறையும் நடப்பது நாமறிந்ததே. அப்படிப்பட்ட வேளையில், தங்களுக்கென ஒரு சுதந்திர வாழ்க்கையோ அல்லது அங்கீகாரமோ கிடைக்காதா என்ற ஏக்கத்துடன், தாய் மண்ணை விட்டுவிட்டு, வேறு இடத்திற்கு மாறும் அவல நிலைக்கு தள்ளப்படுபவர்களே அகதிகள். உலகம் முழுவதிலுமிருந்து, காய்ந்த கண்ணீரோடு எல்லையை கடந்தவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் மேல் உள்ளதாக, ஐ.நா மன்றத்தின் அகதிகள் ஆணையம் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.

நாடுகளில் ஏற்படும் அரசியல் குழப்பம், பொருளாதார தட்டுப்பாடு, உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளியேறும் இந்த அகதிகளுக்கான தினம், முதன் முதலில் ஆப்ரிக்கா கண்டத்தில்தான் அனுசரிக்கப்பட்டது. அதன்பின் கடந்த இரண்டாயிரமாவது ஆண்டு, டிசம்பர் 4-ம் தேதியன்று, ஐ.நா. பொது சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பல்வேறு காரணங்களால் இடம்பெயரும் மக்களுக்கு ‘அகதிகள்’ என அந்தஸ்து வழங்கப்பட்டது. உலகில் உள்ள 54 நாடுகளில், அதிகமாக இலங்கைத் தமிழர்களே அகதிகளாக வாழ்கின்றனர் என்றும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், சுமார் நான்கரை லட்சம் இலங்கை மக்கள் அகதிகளாக உள்ளனர் என்றும் ஐ.நா கூறுகிறது. மேலும் உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம், இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா.வின் சேவை அமைப்பான யுனிசெஃப் கூறுகிறது. இருப்பினும் இன்றைய காலகட்டத்தில், அதிக அகதிகளை உருவாக்கும் நாடாக சிரியா உள்ளது. ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்தே மொத்த அகதிகளில் 60 சதவிகிதம் பேர் இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால் உலகில் அதிக அகதிகளைத் தோற்றுவிக்கும் நாடாக 32 வருடங்களாக ஆப்கானிஸ்தான் விளங்கி வருகிறது. இதில் 95 சதவிகித ஆப்கான் அகதிகள் ஈரானிலும் பாகிஸ்தானிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

Comment

Successfully posted