முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை!- தந்தை கண்முன்னே நடந்த சோகம்!

Apr 08, 2021 10:05 PM 586

சென்னை நெற்குன்றம் படேல் நகரைச் சேர்ந்தவர் 23 வயதான நாராயணன். இவர் கடந்த 7ம் தேதி இரவு உணவகத்தில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, சாலையோரமாக நடந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், நாராயணனை வழிமறித்து கத்தியால் தலையில் குத்தினர்.

இதில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் நாராயணன் சரிந்து விழுந்தார். கத்தியால் தலையில் வெட்டும்போது வீட்டு மாடியின் மேல் இருந்து நாராயணனின் தந்தை பிரம்ம தேவன் பார்த்துகொண்டிருந்தார். ஆனால் கொலை சம்பவம் வெகு தூரத்தில் நடந்துகொண்டிருந்தால், தன் மகனை தான் கொலை செய்கிறார்கள் என்பது நாராயணின் தந்தை பிரம்ம தேவனுக்கு தெரியவில்லை.

இந்த சம்பவத்தில் தலை சிதைந்த நிலையில், கொடூரமான முறையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து நாராயணன் உயிரிழந்தார். கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நாராயணன் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நாராயணன், கடந்த ஒன்பது வருடங்களாக, நெற்குன்றம் படேல் நகர் பகுதியில் தன் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். இவர் பாலிடெக்னிக் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு, வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

மேலும், நாராயணனுக்கும், பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி தனஞ்செயன் என்பவருக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக, ரவுடி தனஞ்செயன் தலைமையிலான கும்பல், நாராயணனை கொலை செய்திருப்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது. கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கொலையாளிகளை, கோயம்பேடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted