ஜெய்ஷ்-இ-முகம்மது - ஒரு பார்வை

Feb 17, 2019 07:56 PM 1130

காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். அவர்களின் மரணத்திற்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை பற்றி காண்போம்...

1999.... டிசம்பர் 24... நேபாளத்தின் காட்மாண்டு நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்த பயணிகள் விமானம் கடத்தப்படுகிறது... சிறிது நேரத்தில் இந்திய அரசுக்கு ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பினர் பிரதான நிபந்தனையை முன்வைக்கின்றனர்.... அப்போது இந்திய சிறையிலிருந்த தீவிரவாதிகளான முஸ்தாக் அகமது, அகமது உமர், மசூத் அசார் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் அது... 178 பயணிகள்... 15 பணியாளர்களின் உயிரை காக்கும் பொருட்டு நிபந்தனையை ஏற்றது இந்திய அரசு... மூன்று தீவிரவாதிகளும் பத்திரமாக பாகிஸ்தான் திரும்பினர்.

அதில் தனியாக பிரிந்து சென்ற மசூத் அசார், 2000ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அரசின் உளவு பிரிவான Inter Services Intelligence-ன் ஆதரவுடன் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை நிறுவினான்... இதனையடுத்து இந்தியா மீது தனது தாக்குதலை தொடுத்தது ஜெய்ஷ்-இ-முகம்மது.

2000ஆம் ஆண்டு ஏப்ரல் 20ல் காஷ்மீரில் இருந்த இந்திய நிலைகள் மீது வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில் 5 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.... அடுத்த தாக்குதலை 2001ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி காஷ்மீரின் சட்டப்பேரவை மீது நிகழ்த்தியது மசூத் அசார் தலைமையிலான அந்த அமைப்பு... தாக்குதலில் 38 அப்பாவிகளின் உயிர்பிரிய காரணமாக இருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்... பாகிஸ்தானின் Inter Services Intelligence அளித்த பண உதவி ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை அடுத்த கட்ட தாக்குதலை நிகழ்த்த ஊக்கமளித்தது...

ஆம், இந்திய ஜனநாயகத்தின் பிறப்பிடமாக திகழும் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் தான் அது... 2001... டிசம்பர் 13ஆம் தேதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் கூட்டுசேர்ந்து அரங்கேற்றப்பட்ட நாடாளுமன்ற தாக்குதலை இந்திய வீரர்கள் முறியடித்தனர்.. இருப்பினும் டெல்லி காவல்துறையினர், நாடாளுமன்ற காவலர்கள் என 6 பேர் மரணமடைந்தனர்... அதில் தோட்ட தொழிலாளியும் ஒருவர்....

இதனால் சர்வதேச அரங்கில் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை ஐக்கிய நாடுகள் சபை... அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொடுத்த அழுத்தத்தால் 2002ஆம் ஆண்டு... ஜனவரி மாதம்... பாகிஸ்தானும் தடை செய்தது... மேலோட்டமாக தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்புக்கு Inter Services Intelligence தொடர்ந்து உதவி செய்து வருகிறது...

அதன் வெளிப்பாடாகவே 2016... ஜனவரி 2ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான படை தளத்திற்குள் புகுந்து வெறியாட்டமாடினர்... 7 வீரர்கள் இந்த தாக்குதலின்போது உயிர்தியாகம் செய்தனர்...

இந்தநிலையில் தான் 2019... பிப்ரவரி 14ஆம் தேதி 40 சிஆர்பிஎப் வீரர்களை பலிக்கொண்ட புல்வாமா தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு...

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவால்பூரை தலைமையிடமாக கொண்டு செயலாற்றி வரும் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் நோக்கம் காஷ்மீரில் குழப்பத்தை விளைவித்து பதற்றத்தை உருவாக்குவதன் மூலம் வளர்ச்சியை தடுப்பதே... அதனை காஷ்மீரிகளே முறியடித்து வருகின்றனர்

Comment

Successfully posted