என் பெயரைச் சொல்லி சில தனி நபர்கள் பாதகம் - நடிகர் அஜித் குமார் எச்சரிக்கை

Sep 17, 2020 04:59 PM 1931

நடிகர் அஜித்குமாரின் பெயரைப் பயன்படுத்தி அவருக்குத் தொடர்பில்லாத சிலர் செயல்படுவதாகவும் அவர்களால் பாதகம் ஏற்பட்டால் அதற்கு அவர் பொறுப்பில்லை என்றும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அஜித்குமார் சார்பில் அவருடைய சட்ட ஆலோசகர் எம்.எஸ்.பரத் இன்று இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், ”சமீபகாலமாக சில தனி நபர்கள் அஜித்குமார் சார்பாகவோ அல்லது அவரின் பிரதிநிதியைப் போலவோ அவருடைய அனுமதியில்லாமல் தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் அஜித்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதை முன்னிட்டு பல ஆண்டுகளாக தன்னுடன் பணியாற்றிவரும் தன் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்றும், அவர் மட்டுமே தன் சமூக மற்றும் தொழில்ரீதியான நிர்வாகி என்றும் அஜித் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.” என்று சட்ட ஆலோசகர் பரத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”அஜித்தின் பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அதுகுறித்து உடனடியாக சுரேஷ் சந்திராவிடம் தெரிவிக்குமாறு அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகாரப்பூர்வமல்லாத நபர்களிடம் தொழில் மற்றும் வர்த்தகரீதியாக தொடர்பில் இருந்தாலோ அதன் காரணமாக பாதகம் ஏதேனும் ஏற்பட்டாலோ, அதற்கு எவ்வகையிலும் அஜித் பொறுப்பாகமாட்டார்” என்றும் அவருடைய சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார். 

இத்தகைய நபர்களிடம் பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜித் கேட்டுக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Comment

Successfully posted