அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் - முதலமைச்சர், துணைமுதலமைச்சர் அறிவிப்பு

Nov 21, 2020 09:52 PM 1051

அதிமுக - பாஜக வெற்றிக் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதிபடக் கூறியுள்ளனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அரசு பல்வேறு சாதனைகளை படைத்து, அதன் மூலம் மக்களின் ஆதரவை பெற்றுள்ளதாகக் கூறினார். எதிர்க்கட்சிகள் மனம் பொறுக்க முடியாமல் குமுறுகிறார்கள், குற்றம்சாட்டுகிறார்கள் என விமர்சித்தார். அதிமுக-பாஜக வெற்றிக் கூட்டணி தொடரும் என்று அறிவித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக மக்கள் ஆதரவுடன் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அதிமுக அமரும் என்பதை உறுதிபடத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அரசின் குடிமராமத்துத் திட்டங்களின் மூலம் மிகச் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் 1,433 கோடி ரூபாயில், 6,000கும் மேற்பட்ட நீர்நிலைகள் குடிமராமத்து திட்டம் மூலம் புனரமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். நீர் மேலாண்மையில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது எனவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், கிராமப் பகுதிகளில் உள்ள 5,186 பாசன நீர் நிலைகள், 25,987 குளங்கள், ஊரணிகள் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் கீழ், ரூ.805 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இதன் மூலம் பெருமளவில் தண்ணீரை சேமித்து வைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார். 2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted