அதிமுக தொண்டர்களுக்கு தலைமை அறிவுறுத்தல்!

Apr 09, 2021 02:21 PM 395

சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பந்தல்கள், நீர்மோர் பந்தல்கள் அமைக்குமாறு, அதிமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் குடிநீர் பந்தல்கள், நீர்மோர் பந்தல்கள் அமைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பந்தல்கள், நீர்மோர் பந்தல்கள் அமைத்து, கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் பணிகளில் அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் ஈடுபட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.

குடிநீர் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை காலையில் ஒருமுறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் அதிமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கூறியுள்ள அதிமுக தலைமை, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், சானிடைசர் வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Comment

Successfully posted