கனமழை அறிவிப்பு - பயிர்களை காப்பீடு செய்ய வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

Nov 22, 2020 08:24 PM 620

மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று வேளாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது.

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் நிதி இழப்பீட்டைத் தவிர்க்க, விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வருகிற 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரோடு, கரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 22 மாவட்ட விவசாயிகள் சம்பா நெல் காப்பீடு செய்ய நவம்பர் 30ஆம் தேதியே இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தஞ்சை, அரியலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், டிசம்பர் 15ஆம் தேதியே சம்பா நெல் காப்பீடு செய்ய இறுதி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சேவை மையம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், வர்த்தக வங்கி ஆகியவற்றில் உரிய கட்டணம் செலுத்தி காப்பீடு செய்யலாம் என்றும், விண்ணப்பம், அடங்கல்/சிட்டா, வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் நகல் ஆகியவற்றை கொண்டு பயீர் காப்பீடு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted