குஷ்புவுக்கு ஆதரவாக அமித்ஷா தேர்தல் பிரசாரம்!

Apr 03, 2021 09:42 PM 879

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்னும் 2 நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை முன்னிட்டு, நாளை இரவு 7 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் தமிழகம் வந்த பிரதமர் மோடி பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.

இன்று காலை 10.45 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவாக, அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் பாண்டி பஜார் நோக்கி பேரணியாகச் சென்று அமித் ஷா ஆதரவு திரட்டினார். அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரித்த அமித் ஷாவிற்கு ஆயிரக்கணக்கான அதிமுக, பாஜக தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அமித் ஷாவும் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மீது மலர்களைத் தூவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தேனாம்பேட்டை, பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அமித் ஷாவுடன் வேட்பாளர்கள் குஷ்பு, ஜான்பாண்டியன், சைதை துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர். சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடிகளை கையில் ஏந்திய படி ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மக்கள் அமித் ஷாவை காண கூடியிருந்தனர். அப்போது கூட்டத்தினரிடையே உரையாற்றிய குஷ்பு, “உங்களுடைய எழுச்சியை பார்க்கும் போது நம்முடைய வெற்றி நிச்சயமாகிவிட்டது. திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவோம். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைந்திடவும், தமிழகம் வளர்ச்சி அடைந்திடவும் தாமரைக்கு வாக்களியுங்கள் என கேட்டுகொண்டார்.

Comment

Successfully posted