சிவப்பு வனம் - மாவோயிஸ்டுகளின் பின்னணிக் கதை

Apr 09, 2021 03:00 PM 116

இந்தியாவில் உள்ள ஆயிரத்து சொச்சம் கிராமங்களுக்கு மோடி பிரதமர் இல்லை; அதன் மக்கள் அரசிற்கு வரி செலுத்துவதில்லை; அதிகாரிகளிடம் சலுகைகள் பெறுவதில்லை; தேர்தல்களை திட்டமிட்டே புறக்கணிக்கிறார்கள். காடுகளால் துண்டிக்கப்பட்ட தீவுகள், அவர்களின் வாழ்விடம். அதனுள் வெளியாட்கள் பிரவேசிப்பதென்பது, தற்கொலைக்கு சமம். வேர்களை போல படர்ந்திருக்கும் கண்ணி வெடிகள், வனத்தில் நுழையும் எவரையும், நொடியில் பிரபஞ்ச துகளோடு கலக்க செய்யும். இந்திய இறையான்மையை இடதால் ஒதுக்கி, தனி ராஜ்ஜியம் நடத்தும் அந்த காட்டின் மாமன்னர்கள் மாவோயிஸ்ட்கள். அங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்களில் அவர்கள் வைத்துதான் சாசனம். அசுரர்கள் வாழ்ந்த இடமென ராமாயணத்தில் கூறப்படும் இந்த தண்டகாரண்ய பகுதி என்பது ரத்தமும் யுத்தமும் செழித்து வளரும் ஓர் சிவப்பு வனம்.

சீனப்புரட்சியில் மாவோ கண்ட வெற்றி, உலகம் முழுவதும் உள்ள கம்யூனிச இயக்கங்களின் பார்வையை மாற்றியது. அதுவரை ஜனநாயகத்தில் களமாடிய அவர்கள், மக்களாட்சியை செத்த பாம்பு என்று எள்ளி நகையாட தொடங்கினர். புரட்சி ஒன்றே விடியலுக்கு வழி என்ற எண்ணத்தை காம்ரேட்கள் மனதில் காத்திரமாக நிறுத்தினார் மாசேதுங். அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. சிபிஐ, சிபிஎம்ற்கு அப்பால் ஒரு தீவிர இடதுசாரி இயக்கம் ((இந்தியாவில் 1967 ல் உருவானது.)) அதன் சூத்திரதாரி சாரு மஜூம்தார். இன்றைய மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் அனைத்தும் அவர் தொடங்கிய நக்சலைட் இயக்க செயல்பாடுகளின் தொடர்ச்சியே.

நக்சல்பாரி..., இமயமலையின் அடிவாரத்தில் இருக்கிற ஒரு விவசாய கிராமம். இந்தியாவின் எல்லா கிராமங்களைப் போலவே இங்கும் நில உடைமையாளர்கள் விவசாயிகளைச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள். குறைந்த கூலி, அடக்குமுறைகள், அதிகார துஷ்பிரயோகங்கள், கடும் தண்டனைகள் என கொத்தடிமை வாழ்க்கை. சாரு இங்கிருந்துதான் தனது புரட்சியை தொடங்கினார். சாருவின் சித்தாந்தம் மிக எளிமையானது. தானாக இறகு போடும் மயில்கள் இந்த உலகில் இல்லை என்று அவர் தீவிரமாக நம்பினார். அப்படி காத்திருப்பது முட்டாள்தனம் என்று விவசாயிகளுக்கு வகுப்பெடுத்தார்.

நில முதலாளிகளிடமிருந்து நீங்களே நிலத்தை பிடுங்குங்கள். ஒரு தவறும் இல்லை. உழுபவனுக்கு இல்லாத உரிமையா? அப்படிப் பிடுங்கி கொள்ளும் நிலங்களை சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுங்கள். தடுக்கிறார்களா?... அழித்துவிடுங்கள். எதிர்க்கிறார்களா?.... கொன்று விடுங்கள். ஆயுதம் ஏந்துங்கள். உங்களுக்காக தேவதூதர் யாரும் வானில் இருந்து இறங்க போவதில்லை. உங்கள் தேவைகளை நீங்கள்தான் தீர்த்துக்கொண்டாக வேண்டும். இதுதான் சாரு.

’அழித்தொழிப்பு’ மட்டுமே புரட்சிக்கு வழி என்று இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து இயக்கம் பரப்பிய சாருவை கொத்தடிமைகளாக நிலத்தில் உழன்ற மக்கள் மீட்பராகவே பார்த்தனர். யோசிக்காமல் அவர் பின்னால் அணி திரண்டனர். பண்ணையாளர்கள் பலர் இரக்கமின்றி வேட்டையாட பட்டார்கள். இயக்கத் தோழர்களைச் சந்திக்கும் சாரு கேட்கிற முதல் கேள்வி, எத்தனை பேரைக் கொன்றீர்கள்? லிஸ்டில் இன்னும் யார் யார் இருக்கிறார்கள்? எப்போது முடிக்கப் போகிறீர்கள்? என்பதுதான்.

மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் கலவரத்தால் பற்றி எரிந்தன. தமிழகத்திலும் சிலகாலம் நக்சல் இயக்க தாவரம் வேர்பிடித்து விளைந்தது. தஞ்சாவூர் நிலக்கிழார்கள் சிலர் அழித்தொழிப்பு பட்டியலில் பெயர்களாக இடம்பெற்றனர். மூன்றே ஆண்டுகளில் நக்சல்பாரி இயக்கம், 20 க்கு மேற்பட்ட மாநிலங்களில் தன் அசுரக் கரங்களை பரப்பி வளர்ந்திருந்தது. போராளிகள் கிராமம் தோறும் புரட்சி என்ற பெயரில் வன்முறையை கையில் எடுத்து ரத்த ஆறு ஓடச் செய்து கொண்டிருந்தார்கள். மத்திய அரசிற்கு பெரும் தலைவலியாக மாறினார் சாரு.

காட்டின் பாதையில் நூல் பிடித்து கழனி, கழனியாக சென்று கொண்டிருந்த சாருவை, நீதியின் வாயிலில் நிறுத்துவது அரசிற்கு பெரும் சவாலாக இருந்தது. முகடுகள், மலைகள், பள்ளங்கள் என காட்டின் ஒவ்வொரு கண்ணியும் சாருவிற்கு காலின் கீழ் இருந்தது. அரசு இயந்திரம் முற்றிலுமாக சறுக்கிய இடம் அது. எனினும் தேடுதல் வேட்டையின் பலனாக 1972ம் ஆண்டு காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் சாரு மஜூம்தார்.

மேகம் இல்லாத வானமாக சாரு இல்லாத நக்சல்பாரி இயக்கம் தவித்துப் போனது. தொண்டர்கள் உற்சாகம் குன்றி போனார்கள். சாருவை காட்டிலும் சாருவின் நம்பிக்கை விதைக்கும் வார்த்தைகள் இல்லாதது அவர்களை சோர்வுற வைத்தது. அந்த சமயத்தில் இந்திராகாந்தி கொண்டு வந்த அவசர நிலை பிரகடனம், நாடு முழுவதும் இருந்த நக்சல் பாரிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. லட்சக்கணக்கானோர் வனவாசத்தில் இருந்து சிறைவாசத்திற்கு அனுப்பப்பட்டார்கள். உயிர் துச்சமென வந்தவர்கள் தான். ஆனால் வலியில் துடிதுடித்து போனார்கள். இந்த சிறை அனுபவமும் சித்ரவதையும் பல போராளிகளை மிதவாத இயக்கங்களை நோக்கி நகர்த்தியது.

அவசர சட்டத்தினால் புகைநிலையில் இருந்த சாருவின் படை, எமர்ஜென்சி களேபரங்கள் எல்லாம் முடிந்து ஜனதா ஆட்சியில் சகஜ நிலை திரும்பிய பிறகு புத்துணர்ச்சியை மீட்டுக் கொண்டு மீண்டும் பற்றி எரியத் தொடங்கியது.

((1980 ம் ஆண்டு தமிழகத்தில் நக்லைட் செயல்பாடுகள் தலைவிரித்தாடியது. தருமபுரி மற்றும் தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களில் நக்சலைட்களின் நடவடிக்கை அதிகமாக இருந்தது. அடுத்தடுத்து கொலைகள். அதன் உச்சகட்டமாக ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் வி.பழனிச்சாமியும், இரண்டு தலைமைக் காவலர்களும் கொல்லப்பட்டு அவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன. இது அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரை கவலைக்குள்ளாக்கியது. காட்பாடியில் நடந்த இன்ஸ் பெக்டரின் இறுதி ஊர்வலத்துக்கு அவரே தலைமை ஏற்றார்.

நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம். நாட்டின் கவனம் அங்கே திரும்பியது. இறந்த இன்ஸ்பெக்டர் பழனிச்சாமியின் மகள் பெயர் அஜந்தா. அவரின் பெயரிலேயே ஆபரேஷன் அஜந்தா என்ற பெயர் நக்சல் இயக்கத்தினரைப் பிடிக்க நான்கு பிரிவுகள் கொண்ட ஒரு சிறப்பு போலீஸ் படையை அமைத்தார் எம்ஜிஆர். வால்டர் தேவாரம் தலைமை வகித்த இந்த பிரிவு தமிழகத்தில் நக்சலைட்களை தேடி தேடி ஒடுக்கியது. 2 ஆண்டுகளில் 50 க்கு மேற்பட்ட நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ))

தமிழகம், மேற்கு வங்கம், ஒரிசா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சாருவின் படை தொல்லை கொடுத்து கொண்டிருந்த அதே கால கட்டத்தில் ’மத்திய யுத்தகுழு’ ஒன்று ஆந்திராவை அதிர வைத்து கொண்டிருந்தது. அதனை தொடங்கியவர், கொண்டபள்ளி சீதாராமய்யா. சாருவை போல அழித்தொழிப்பு தான் மக்கள் யுத்த குழுவின் கொள்கை என்றாலும் கூட அதன் செயல்பாடுகள் நக்சல்பாரி இயக்கத்தை காட்டிலும் சற்று விசித்திரமானதாக இருந்தது. கொள்கை பரப்பு குழு, போராட்ட குழு, ராணுவ குழு என 3 குழுக்கள் மக்கள் யுத்த குழுவின் அங்கமாக இருந்தன. கொள்கை பரப்பு குழு...., மக்களிடையே தங்கள் கருத்தியலை பரப்பும். எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளர்கள் அதில் இருந்தார்கள். ஆந்திராவின் புகழ்பெற்ற பாடகர் கத்தார் இந்த குழுவில் தான் இருந்தார்.போராட்டகுழு..., மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்கும். ராணுவ குழு...., கண்ணி வெடிகள் வைப்பது, கார்களை கவிழ்ப்பது....சுருக்கமாக சொன்னால் சாரு அழித்தொழிப்பு படையின் ஆந்திர வெர்ஷன் இது. மக்கள் விரோத சக்தி என்று தாங்கள் கருதுகிற அரசியல்வாதிகளை எப்படியாவது கடத்திச் சென்று விடுவதில் மக்கள் யுத்தக் குழு ஒரு ஸ்பெஷலிஸ்ட். அப்படி அவர்கள் கடத்திக் கொன்ற நபர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டும். அரசு இயந்திரத்தின் எந்தப் பாகமும் எக்காலத்திலும் எட்டிப் பார்த்திராத பல குக்கிராமங்களில் இவர்கள் வேலை பார்க்கிறார்கள். ஆந்திராவின் 175 க்கு மேற்பட்ட கிராமங்கள் இப்போதும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அங்கு சட்டம், நிர்வாகம் என சகலமும் மக்கள் யுத்த குழு மைந்தர்கள்தான்.

2003 ல் அன்றைய ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற காரை கன்னிவெடி வைத்து கவிழ்த்த சம்பவம் மனவாடு தேசத்தில் மக்கள் யுத்தகுழுவிற்கு வேட்டு வைத்தது. அந்த விபத்தில் அபாயகரமான நிலைக்கு சென்று உயிர் பிழைத்தார் சந்திரபாபு நாயுடு. ராணுவமும் மாநில காவல் துறையும் ஒருசேர காட்டிற்குள் புகுந்து வேட்டையாட தொடங்கினர். இதனால் நகரில் சுதந்திரமாக சற்றி கொண்டிருந்த மாவோயிஸ்ட்டுகளின் கால்கள் கட்டப்பட்டன. காடுகளுக்குள்ளேயே முடங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். அதேசமயம் அவர்களின் பரப்புரை குழுவும், போராட்ட குழுவும் தத்தமது பணிகளை செய்து கொண்டுதான் இருந்தன.

மக்கள் யுத்த குழு ஒருபுறம் ஆந்திராவில் அத்துமீறிக் கொண்டிருந்தது என்றால் மேற்கு வங்கம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சாரு வழிவந்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர், ரணகளம் செய்து கொண்டிருந்தது. கருத்தொற்றுமை, இயக்கத்தை வலிமைப்படுத்துதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இவ்விரு இயக்கங்களும் 2004 ம் ஆண்டு ஒன்றினைந்து மாவோயிஸ்ட் பொதுவுடைமை இயக்கம் என்ற பெயரில் மாபெரும் பலத்தோடு ஜனநாயகத்திற்கு எதிராக முன்னகர தொடங்கினார்கள்.

மாவோயிஸ்ட்கள் தேர்ந்த போராளிகளாக இருந்தனர். எண்ணித் துணிந்த கருமத்தை முடிக்காமல் அவர்கள் பின் வாங்கியதில்லை. எத்தனை பெரிய பாதுகாப்புகளுக்கு இடையிலும் திட்டமிட்ட படி புகுந்து கிடா வெட்டுவதில் மாவோயிஸ்ட்டுகள் கில்லாடி. தொழிற் முறையாக பயிற்சி பெற்ற ராணுவத்தின் தரப்பில் உயிரிழப்புகள் இரட்டை இலக்கத்தில் இருந்தாலும் மருந்துக்கு சிறு காயங்களை மட்டும் வாங்கிக் கொண்டு தப்பி விடுவார்கள் மாவோயிஸ்ட்டுகள்.

மேற்குவங்கம் மாநிலத்தின் லாக்கர் பகுதி. மாவோயிஸ்டுகளின் முக்கியத் தளமாக அறியப்படும் ஆதிவாசி நிலப்பரப்பு. லாக்கரின் ஐம்பது கிராமத்து மக்களும் அரசிடமிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களாக அறிவித்துவிட்டு, வரி கட்டுவது முதல் அனைத்து நடவடிக்கைகளையும் அறவே நிறுத்தியவர்கள். அங்குள்ள காவல் நிலையத்தில் கொரிலா தாக்குதல் நடத்தி மொத்தமாக லாக்கர் பகுதியை 2008 ல் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர் மாவோயிஸ்ட்டுகள்.

இது மேற்கு வங்க அரசிற்கு மிகப் பெரிய கெளரவ பிரச்சனையாக மாறியது. காவல்துறை களம் இறங்கியது.
7 நாள் போராட்டம். போராட்டக்காரர்கள் ராட்சத மரங்களை வெட்டி வழியில் போட்டார்கள். யாரேனும் நுழைந்தால் சினிமா காட்சிகளில் காணுவது போல மரங்கள் சரியும் படி வியூகம் வகுத்தார்கள். காவலர்கள் நகரும் பாதை அறிந்து கண்ணிவெடி நிரப்பினார்கள். அரசு இயந்திரத்தால் ஒரு இன்ச் கூட முன்னேர முடியவில்லை, இறுதியில் 4 ராணுவ வீரர்கள் பலிகொடுத்து காவல் நிலையத்தை மட்டும் கைப்பற்றியது மேற்கு வங்க அரசு. ஆனால் லாக்கர் மக்கள் இன்றும் மாவோயிஸ்டுகளுக்கு மதிலாக தான் நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஒரிசா மாநிலம் கோராபுட் மாவட்டம், பாக்சைட் சுரங்கத்தின் மீது மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதல் அன்றைய நாளில் பெரும் விவாதப் பொருளானது. இதில் ராணுவம், காவல்துறை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் பை நிறைய சுரங்கத்தில் இருந்து எடுத்த வெடி பொருட்களை நிரப்பி கொண்டு தப்பினார்கள் மாவோஸ்ட்டுகள். 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக அரசு அடுத்த செய்தி வாசித்தது.

தோல்விகள் மாவோயிஸ்டுகளுக்கு மிகச் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே வந்திருக்கின்றன. பெரும்பாலும் அவர்களது ஆபரேஷன்கள் வெற்றியில்தான் முடிந்திருக்கிறது. 2008 ல் புவனேஸ்வரில் கிட்டத்தட்ட 300 மாவோயிஸ்டுகள் திடீரென பேருந்துகளிலும் டிரக்குகளிலும் வந்திறங்கினார்கள். ஆயுதக் கொள்ளைதான் முக்கிய நோக்கம் என்றாலும் பல்வேறு காவல் நிலையங்களில் லாக்கப்பில் இருந்த பல மாவோயிஸ்டுகளையும் மாவோயிஸ்டுகள் அல்லாத சில ஆதிவாசி மக்களையும் விடுவிப்பதும் அவர்கள் செயல் திட்டத்தில் இருந்தது. கிட்டத்தட்ட பத்துக்கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களைக் கொள்ளையடித்து கொண்டு, வேண்டியவர்களை விடுவித்துக்கொண்டு அவர்கள் நல்லபடியாகக் காட்டுக்குப் போய்ச்சேர்ந்தபோது, பாதுகாப்புப் படையில் 14 பேர் மரணமடைந்திருந்தார்கள். இழப்பு 10 கோடி ரூபாய் என அடுத்த நாள் அரசின் அறிக்கையில் இருந்தது.

நடப்பாண்டு ஏப்ரல் முதல்வாரத்தில் சத்தீஸ்கரில் நடத்தப்பட்ட தாக்குலில் 22 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ((அதேசமயம் பிணைக்கைதியாக பிடித்து செல்லப்பட்ட மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் ராகெஷ்வர் சிங்கை மாவோயிஸ்ட்டுகள் விடுவித்தனர்.)) இத்தகைய சம்பவங்கள் மத்திய அரசுக்கு தொடர் தலைவலியாக இருந்து வருகிறது. மாவோயிஸ்டுகளின் எல்லை சுருங்கி விட்டது என்று கூறி வந்த மத்திய அரசு இதுபோன்ற கொரிலா தாக்குதல் குறித்து எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறது. ஆனால் 2010 ஆண்டு இதே சத்தீஸ்கரில் 37 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்ட போது காங்கிரஸும் இதே எல்லை சுருக்க வாய்ப்பாட்டைதான் படித்தது.

((2010 ம் ஆண்டு சந்தனகடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற விஜயகுமார், சிஆர்பிஎஃபின் கோப்ரா பிரிவுக்கு தலைவராக நியமிக்கபட்டார். அப்போது மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். தென்னிந்தியாவில் மாவோயிஸ்ட்டுகளின் எல்லை சுருக்கப்பட்டது 2010 முதல் 2012 வரையிலான இவரது பதவி காலத்தில்தான் நிகழ்ந்தது. ))

மற்ற மாநிலங்களை காட்டிலும் சத்தீஸ்கரில் இதுபோன்ற மோதல்கள் அதிகம் நிகழ்கின்றன. அதற்கு காரணம் சத்தீஸ்கரில் இயங்கி வரும் சல்வா ஜுடும் என்ற மாவோயிஸ்ட் எதிர்ப்பு குழு. ஆதிவாசி மக்களில் மாவோஸிட்டுகளுக்கு எதிராக இருப்பவர்கள் இந்த குழுவின் உறுப்பினராக இருக்கின்றனர். அதன் நடவடிக்கை தொடக்கத்தில் பாராட்டதக்கதாக இருந்தாலும் நாளுக்கு நாள் அவர்கள் வரம்பு மீறினார்கள். குறிப்பாக 2006 ல் அக்குழுவை சத்தீஸ்கர் அரசு அங்கீகரித்த பிறகு அவர்களின் ஆட்டம் உச்சம் தொட்டது.

கிராமங்களில் வீடு வீடாகப் புகுந்து அடிப்பார்கள். உண்மையைச் சொல். நீ மாவோயிஸ்ட்தானே? இந்த கிராமத்தில் உன்னைத் தவிர இன்னும் எத்தனைபேர் இயக்கத்தில் இருக்கிறீர்கள்? ஆயுதங்கள் எங்கே? வெடி மருந்து வைத்திருப்பதாகத் தெரியவந்ததே, எங்கே பதுக்கி வைத்திருக்கிறாய்? இவள் யார்? உன் மகளா? இவளும் இயக்கத்தில் இருக்கிறாளாமே? யாரும் எதுவும் பேச முடியாது. பேச விடமாட்டார்கள். அடி, அடி, என்று அடித்து கீழே தள்ளிவிட்டு வீடு முழுவதையும் கந்தர் கோலமாக்கி விட்டுப் போவார்கள். பெண்கள் இருக்கும் வீடுகளில் வன்கொடுமை செய்யாமல் அவர்கள் நகர்வதே இல்லை. எத்தனை மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்தும் இதுவரை சல்வா ஜுதும் உறுப்பினர் ஒருவர் கூட தண்டிக்கப்படவே இல்லை.

எல்லா மாநிலங்களிலும் எண்ணற்ற உயிப்பலிகள். எனவே 2009 ஆண்டு மாவோயிஸ்ட் பொதுவுடைமை இயக்கத்தை தடை செய்த இயக்கமாக அறிவித்தது இந்திய அரசு. அரசின் இந்த நடவடிக்கை ராணுவ குழுக்களுக்களை பாதிக்கவில்லை. ஆனால் கருத்துரை மற்றும் போராட்ட குழு நபர்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். வேறு வழியின்றி பல கலைஞர்கள், படைப்பாளிகள் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். ஆனால் பலர் கொண்ட கொள்கைக்காக வீடு துறந்து தண்டகாரண்யத்தில் தஞ்சம் அடையும் முடிவை எடுத்தார்கள்.

இந்தியாவில் 20 மாநிலங்களில் பரவியிருக்கும் மாவோயிஸ்டுகளின் மொத்த ஆள் பலத்தை அத்தனை எளிதில் யாரும் மதிப்பிட்டு விட முடியாது. பெரும்பாலும் அடர் கானகங்களிலும், காடு சார்ந்த ஆதிவாசி கிராமங்களிலும் வாழும் மாவோயிஸ்டுகள், தாக்குதலின் போது மட்டுமே நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். சித்தாந்தத்தால் உந்தப்பட்டு இயக்கத்தில் வந்து சேரும் இளைஞர்கள் தவிர, மாவோயிஸ்டுகளின் படையில் ஏராளமான ஆதிவாசி இளைஞர்கள் உண்டு. 8 வயது சிறுவன் ரைபிளை தூக்கி தோளில் போட்டு கொண்டு நடக்கும் காட்சிகள் எல்லாம் சிவப்பு வன சித்திரத்தில் சாதாரணம்.

கருத்தியல் வகுப்பு, ராணுவ வகுப்பு என 2 ம் இவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஆதிவாசி கிராங்களில் தவறிழைப்பவர்கள் அவரின் நீதிமன்ற முறைப்படி சவுக்கடி கொடுப்பது வழக்கம். சுண்டு விரல் வெட்டப்படும். தவறை பொறுத்து அது...., கை, கால், தலை வரை போகும். இதனை சிறுவர்களை பார்க்க வைப்பதை அவர்களின் அச்சத்தை போக்கும் யுக்தியாக பயன்படுத்துகிறார்கள். பின்னாளில் சிறு சிறு தண்டனைகளை அவர்களே நிறைவேற்ற வைக்கிறார். ரத்த பயத்தில் இருந்து அவர்களை விடுவிப்பது இதன் நோக்கம் என்று சொல்லப்படுகிறது. எல்லா பயிற்சிகளையும் முடித்து இயக்கத்தில் சேர்ந்த ஒருவனை 16 வயதிற்குள் போருக்கு தயார்படுத்தி விடுகிறார்கள் இந்த தீவிரவாத காம்ரேட்கள்.

மாவோயிஸ்ட்டுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வழங்கப்படுவதில்லை என்று நம்பப்படுகிறது. சீனா, நேபாளம் தவிர்த்து மாவோயிஸ்ட் சித்தாந்ததுடன் உடன்படும் நாடுகள் உலகில் இல்லை. எனினும் அவர்கள் தரப்பிலிருந்து நிதி அளிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. ஆயுத தேவை ஏற்படும் போது அவர்கள் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி அதில் உள்ள ஆயுதங்களை கைப்பற்றுகிறார்கள். பணத்தேவைக்கு ஆதிவாசி கிராம மக்களே உதவுகிறார்கள்.

மாவோயிஸ்ட் ஆளும் கிராம மக்களிடமிருந்து வசூலிக்கும் வரிப்பணத்தைப் பெரும்பாலும் அந்தந்த கிராம மேம்பாட்டுப் பணிகளுக்கே அவர்கள் செலவிட்டு விடுகிறார்கள். ஆனால் எந்த கிராமத்தில் ஜமீந்தாரை மக்கள் விரட்டியடித்தாலும், ஜமீனில் உள்ள பணமும் நகைகளும் இயக்கத்துக்கு வந்துவிட வேண்டும்! இதுதான் அனைத்து பகுதியில் உள்ள மாவோஸ்டுகளின் வழக்கம்.

மாவோயிஸ்டுகளால் ஆளப்படும் கிராமங்களில் மக்கள் அவர்களைக் கிட்டத்தட்டக் கடவுளாகவே கருதுகிறார்கள். வெறும் பேச்சாக இல்லாமல், அதிகார வர்க்கத்தினரை, நில உடைமையாளர்களைத் தாக்கி, விரட்டியடித்து நிலங்களைப் பங்குபோட்டு மக்களுக்குக் கொடுப்பதன் மூலம் அவர்களது ஆதரவையும் அன்பையும் பெறுகிறார்கள்.

மாவோயிஸ்டுகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேசம் முழுவதும் ஒரே சமயத்தில் புரட்சி வெடிக்க செய்து கொரிலா தாக்குதல் நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதான் அவர்களின் இலக்கு. ஆனால் இதற்கான சூழ்நிலையை உருவாக்கி தருவது மக்களோ, மாவோயிஸ்டுகளோ அல்ல. அதிகார வர்க்கத்தினர் தான். மாவோயிஸ்டுகளை ஒடுக்க ராணுவ நடவடிக்கைகள் நிச்சயம் அவசியமானது. ஆனால் அதை விட முக்கியமானது மக்களை சுரண்டி வாழாதிருப்பது. அதுதான் அவர்களை மாவோயிஸ்ட்டுகளை நோக்கி நகர்த்துகிறது. மக்கள் அரசாங்கத்தை ஆதரிக்கும் சூழலை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தினால் ஒழிய சிவப்பு வனம் பசுமையாவது கடினம் என்பதுதான் நம் கண்முன் தெரியும் உண்மை.

தோட்டாக்களை விதையாக்கி எந்த அமைதி மரமும் பூத்துவிட முடியாது. பேச்சுவார்த்தை என்ற நீருற்றி தான் இந்திய சுதந்திரம் என்ற பெருங்காடு உருவாக்கப்பட்டது. இப்போது இப்பெருங்காட்டில் அமர்ந்து கொண்டு துப்பாக்கிகளால் எழுதும் ரத்தச் சரித்திரம் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. இதனை காலம் உணர்த்தும், அப்போது உணர்ந்து கொள்ள மாவோயிஸ்ட்டுகள் இருப்பார்களா என்பது கேள்விக்குறியே..

Comment

Successfully posted