
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
அச்சு ஊடகங்கள்...அதிகாலை சாலைகளை போல ஆர்ப்பாட்டமில்லாதவை. அதன் வடிவமைப்புகள் அரண்மனை ஓவியங்களை போல நேர்த்தியானவை. படிப்பது அல்ல அதைப் பார்க்கும் இன்பமே அலாதியானது. எனவேதான் செய்தித்தாள் வந்து விழுந்ததும், பிரித்து முழுமையாக புரட்டுகிறோம். பிறகுதான் வாசிக்கிறோம்.
அச்சு ஊடங்கள், ஊடக உலகின் தலைமகன் எனில் அந்த குடும்பத்தின் அடுத்த வாரிசு, வானொலி. அதில் வாசிக்கப்படும் செய்தி தொகுப்புகள் என்பது ஹைக்கூ கவிதைகளை போல. அவை வரிக்கு வரி சுவாரஸ்யம் குறையாமல் கோர்க்கப்பட்டிருக்கும். பிசிறு தட்டாமல் தமிழ் பேசிய கடைசி தலைமுறை ஆல் இண்டியா ரேடியோ அறிவிப்பாளர்கள்தான்.
இயற்கை நியதி.... வானொலிக்கும் வயதாகி, பின் காணொலிகள் வந்தன. இதன் செய்தி வழங்கும் முறை என்பது வானொலியின் கூறுகளில் இருந்து வார்க்கப்பட்டவையாகவே இருந்தன. ஏறக்குறைய அச்சு, வானொலி, தொலைக்காட்சி என மூன்று ஊடகங்களும் ஒன்றிலிருந்து ஒன்று மேம்பட்ட வடிவமாகவே இருந்தனவே ஒழிய அதன் மையப்புள்ளி என்பது மட்டும் மாறவில்லை.
ஆனால் இன்று ஊடக உலகில் கோலோச்சும் இணையம், அது எவரும் எதிர்பாராத திருப்பம். “இணையத்தில் செய்தி” என்ற போது எல்லாரும் முதலில் சிரித்தார்கள். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அது அடைந்த அசுர வளர்ச்சி ஊடக உலகையே உலுக்கி பார்த்தது. ஒரு செய்தியை வெளியிட, செய்தியாளர்கள் தேவையில்லை, தொகுப்பாளர்கள் தேவையில்லை, ஏன் பேப்பர் கூட தேவையில்லை என்பது அன்றைய நாளில் அதிசயமாகவே பார்க்கப்பட்டது. அசுர வேகத்தில் செல்லும் தனியார் பேருந்துகளை போல அதன் போக்கு யாருக்கும் பிடிபடவில்லை. ஆனால் நெரிசலான பேருந்தில் நின்று கொண்டு பயணிப்பது ஒரு வகை சுகம் என நினைத்ததோ என்னவோ.... இளம் தலைமுறை அதில் வரிந்து கட்டி கொண்டு ஏறியது.
இந்தியாவில் காதலி இல்லாதவர்களே இல்லை. 28 வயதுக்குள் இருக்கும் எல்லோருமே கமிட்டடுதான். இப்படி சொன்னால் பலர் பாக்ஸிங் கிளவுஸ் மாட்டிக் கொண்டு பாய வருவார்கள். அவர்களுக்கு பேஸ்புக்கிலோ வாட்ஸபிலோ வேண்டுமானால் ஒரு காதலி இல்லாமல் இருக்கலாம். ஆனால் பேஸ்புக்கோ வாட்ஸப்போ நிச்சயம் ஒரு காதலியாக இருக்கும். இந்த காதலிகள் இல்லையெனில் அவர்களுக்கு கையும் ஓடாது...காலும் ஓடாது. உலகம் இருண்டு போகும், உள்ளம் தளர்ந்து போகும். பிரிவும் சோகமும் காதலின் உரிப்பொருள்கள் எனில் இதன் பெயரும் காதல் தான்.
காதல், காதலாக இருக்கும் வரை கண்ணுக்கு அழகுதான். ஆனால் அது நோயாக பீடிக்கும் போதுதான் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. அந்த வகையில் இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட எல்லா சமூக வலைதளங்களும் இன்றைய நாளில் மனித குலம் கடக்க வேண்டிய பெருந்தொற்றுதாகத் தான் மாறிப் போய் இருக்கிறது. கொலை, கொள்ளை, வன்முறை, பாலியல் வன்புணர்வுகள் என எல்லா குற்றசெயல்களையும் கோடு போட்டு பாகம் குறித்தால் அது கடைசியாக சமூக ஊடகம் எனும் சந்தில் தான் போய் நிற்கிறது.
ஆண்டவனை பழித்தாலும் அறிவியலை பழிக்க கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இன்று பழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பேஸ்புக் என்ற ஊடகத்தில் வரும் செய்திகளால் ஒரே ஆண்டில் ஒரு நாட்டில் 23 பேர் அடித்து கொல்லப்படுவார்களாயின் அந்த அறிவியலை எப்படி ஆராதனை செய்து கடக்க முடியும்...? காவல் நிலையங்களில் குவியும் புகார்களில் பாதிக்கும் மேலான பங்கு வகிப்பது ஷாட்சாத் சமூக ஊடகங்கள்தான்.
சமூக ஊடகங்களால் சமூகத்திற்கு எவ்வித நன்மையும் இல்லையா...எனில் இருக்கிறது. எகிப்தில் நடைபெற்ற வசந்த புரட்சி என்று அழைக்கப்பட்ட பெரும் மக்கள் திரள் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது பேஸ்புக்கில்தான். அந்த நன்றி.. எகிப்தில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு பேஸ்புக் என்றே பெயர் வைத்து கொண்டாட காரணமாக அமைந்தது. கூகுள் போல தங்கள் மகனும், மகளும் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என நினைத்து குழந்தைக்கு கூகுள் என பெயர் வைத்த பெற்றோர்கள் இங்குண்டு. இவ்வளவு ஏன்...., தமிழ்நாட்டில் புயல், மழை,வெள்ளம், போன்ற பேரிடர் காலங்களில் உதவும் கரங்களை கை பிடித்து அழைத்து வந்தவை இணையம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இப்படி கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவையாக இருக்கும் இணையத்தில், இப்போது மிருகத்தின் பற்கள் கூர்மையாகியிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கருத்து இருக்கலாம். ஆனால் அதனை உலகமே ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற அடாவடித்தனம் எத்தனை ஆபத்தானது....? அந்த ஆபத்துதான் இப்போது இணையத்தில் புரையோடி இருக்கிறது. பொய்யுக்கும் புரட்டுக்கும் எழுத்து வடிவம் கொடுத்து இணையத்தில் உலவ விடுகிறார்கள். துயரம் என்னவெனில் அந்த போலிக் காத்தாடிகள்தான் பட்டத்தை விட உயரமாக பறக்கின்றன. விரும்பாதவர்களை மார்பிங் செய்து நிர்வாணப் படுத்துவது, வேண்டாதவர்கள் மீது அபாண்டங்களை சுமத்துவது என சமூக ஊடங்கங்கள், ஆழ்மனதின் குரூரங்கள் அவிழும் இடமாகவே இருக்கின்றன.
பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களும் சரி..., அதில் கணக்கு வைத்திருப்பவர்களும் சரி.... பொறுப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்களாவே இருக்கிறார்கள். அங்கு கோட் போட்ட எல்லாருமே கோடீஸ்வரன்தான். ஷேர் செய்யும் எல்லோருமே செய்தியாளர்கள்தான். அவர்கள் அனுப்பு செய்தியும் பகிரும் தகவல்களும் உண்மையா இல்லையா..? என்பதை பற்றியெல்லாம் கவலையில்லை. அவர்களுக்கு தேவையெல்லாம் வியூஸ், லைக்கை தவிர வேறொன்றும் இல்லை.
பேஸ்புக்கில் காதலித்து வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஒரு கட்சியே தொடங்கலாம். அந்த அளவிற்கு அவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பேஸ்புக் மூலம் 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த 22 வயது லவ்லி கணேஷ் என்ற காதல் சைகோவின் கதையை யாரும் மறந்திருக்க முடியாது. நாகர்கோயில் காசி முதல் காதல் சைகோ கணேஷ் வரை காதல் வளர்த்து பெண்களை சீரழிக்க காரணமாக இருந்தவை பேஸ்புக் பேக் ஐடிக்கள்தானே..!
இல்லாத கார்த்தியை, திவ்யா ஊர் ஊராய் தேடி அழைய காரணமாக இருப்பது எது..? வாட்ஸப் குழுவின் வக்கிர பேச்சு. கடந்த சனிக்கிழமை திவ்யா அளித்த பேட்டியை பார்த்தாலே தெரியும். காதலனை காணவில்லை என்று காவல் நிலையம் வந்தவர்கள் யாராவது சிரிப்பார்களா.... ? திவ்யா சிரிக்கிறார். ”புகழ் வெளிச்சம்” அவரை பொய்யுரைக்க வைக்கிறது. "புகழ்" அது ஒன்றுதான் திவ்யா போன்றவர்களின் இலக்கு. சமூக ஊடகங்களில் புழங்கும் எல்லாரும் அந்த ராஜ போதையில் சிக்கிதான் மூர்ச்சையாகின்றனர்.
”தன்னை ஒருவர் கவனிக்கிறார். தன்னை ஒருவர் பாராட்டுகிறார். தன்னை ஒருவர் பின்பற்றுகிறார்”.
இணைய வாசிகள் எல்லோருக்கும் இதில் ஏதோ ஒன்றுதான் இலக்கு. பேஸ்புக்கின் வலது மூலையில் பூக்கும் சிவப்பு பூக்கள்தான் எத்தனை விலை மதிப்பற்றதாக இருக்கிறது.....!!
ரெளடி பேபி சூர்யா, ஜிபி முத்து.... என சமூக ஊடகங்கள் தமிழ் கூர் நல்லுலகிற்கு தந்த கொடைகளை மறக்க முடியுமா...? சென்சாரை மனதில் வைத்து ”ரீல் புகழ்” இலக்கியா தவிர்க்கப்பட்டார் ”ஆர்மியினர் அமைதி காக்கவும்”. இவர்கள் மட்டுமல்ல, பலர் பேஸ்புக், இன்ஸ்டா எல்லாத் திசையிலும் கணக்கை திறந்து வீடியோவாக வெளியிட்டு தள்ளுகிறார்களே...அதில் என்ன திருப்பாவையும் திருவெம்பாவையுமா உபன்சாயம் செய்யப்படுகின்றன....? ஆபாசம், வன்மம், மிரட்டல்... இதை தவிர என்ன இருக்கிறது அவர்கள் வீடியோவில்... ஆனால் சாலையில் செல்பவரின் கவனத்தை சாக்கடைகள்தானே குவிக்கும். அதுபோல இந்த இந்த சாக்கடைகள்தான் இங்கு சமூக ஊடக பிரபலம்.
யூ டியூப்பில் வரும் கண்டெண்டுகளை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு போடப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் யூ டியூபே தடை செய்யப்பட வேண்டிய தளம்தான் என்று கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்தியாவில் 37 கோடி பேர் இணைய இணைப்பு பெற்றுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதில் 97 சதவீதம் வீடியோக்கள் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் வீடியோ தளமான யூ டியூப்தான் சமூக கழிவுகளை வழித்து போடும் ஆகச் சிறந்த குப்பை தொட்டியாக இருக்கிறது. மனித மனங்களில் குரூரங்கள் அனைத்தும் அங்குதான் கடைவிரிக்கப்பட்டு அது காசாக மதிப்பு கூட்டப்படுகின்றன. Chennai Talks, Media Horn போன்ற சேனல்கள் தெருவில் போகிறவர்களை பார்த்து ”ஸ்டேமினா” எவ்வளவு என்று கேட்டு அத்துமீறுகிறார்கள் என்றால், Behindwoods, Galata போன்ற டிஜிட்டல் உலகின் பெருமுதலைகளும் அதே மூன்றாம் தர வேலையைதான் செய்கின்றன. Troll என்ற பெயரிலும் Prank என்ற பெயரிலும் அவர்கள் நடத்தும் அருவருப்புகள் அளவற்றவை.
தனியார் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்ப கூடாது என நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ”சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியை டிஜிட்டல் மீடியா என்ற போர்வையில் மக்கள் வெளிக்கு கொண்டு வந்து காசு பார்க்கும் Behindwoods போன்ற சேனல் எல்லாம் தன்னை ஊடகம் என எந்த உரிமையில் சொல்லி கொள்கிறது என தெரியவில்லை.
யூ டியூபில், முதலில் மூவி ரிவியூ சேனல்கள் வந்தன, பின் மொபைல் போன் ரிவியூ சேனல்கள் வந்தன. ஆனால் தற்போது சரக்கு ரிவியூ சேனல்கள் படையெடுத்திருக்கின்றன. ”கசப்பாக இருக்கிறது, புளிப்பாக இருக்கிறது, ஷை டிஸ்க்கு டிராகன் சிக்கன் அற்புதம்” ....." டேய் ஓவரா போறிங்கடா டேய்ய்."
யூ டியூப், வாட்ஸப், பேஸ்புக்... என தனது பங்காளிகள் இப்படி தினம் தினம் சர்ச்சையில் சிக்கினாலும் டிவிட்டரின் பேர் எங்கும் அடிபடுவதில்லை. ஆனால் இருப்பதிலேயே ஏ1 குற்றவாளி டிவிட்டதான். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பேஸ்புக், யூ டியூப் போன்ற தளங்களில் பார்ன் மூவிஸை பதிவேற்ற முடியாது. ஆனால் டிவிட்டர் ஒரு மினி பார்ன் வெப்சைட். அந்த அளவுக்கு தலைவன் தணிக்கைகுள் வராத தாராளபிரபு. பள்ளிக் காலங்களில் எல்லா தவறுகளையும் செய்து விட்டு சாமர்த்தியமாக ஆசிரியரிடம் இருந்து தப்பித்து கொண்டே இருப்பானே வகுப்பில் ஒரு மாணவன். அவன் குணாதிசயத்துக்கு கோடிங் எழுதினால் அதுதான் டிவிட்டர்.
லாபத்தை மட்டுமே லட்சியமாக கொண்ட இந்த சமூக ஊடகங்களுக்கு எதிராக, வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என பலர் நீதிமன்ற படியேறி இருக்கிறார்கள். எல்லா வழக்கையும் எடுத்து சொன்னால் இன்றைக்குள் முடியாது. எனவே சில வழக்குகளை மட்டும் சீர்தூக்குவோம்.
வனிதா விஜயகுமார், பீட்டர்பாலை திருமணம் செய்வது தவறா...சரியா...? என யூ டியூப் சேனல்கள் வெளியிட்ட வீடியோக்களால் தமிழ்நாடு உள்நாட்டு போர் பதற்றத்தில் இருந்த நேரம், வழக்கறிஞர் சுதன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் இணைய தளங்களையும் ஓடிடி தளங்களையும் தணிக்கை செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், மனுவின் மீது சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது.
2020 ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இதில் சமூக வலைதளங்கில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்க முடியாது என கூறவே, அதனை ஏற்றுகொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததோடு வாட்ஸப் நிறுவனம் பதிலளிக்க நோட்டிஸும் அனுப்பியது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், உச்ச நீதிமன்றத்தில் சமூக வலைதளத்தால் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வதாகவும் எனவே இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு உச்சவயது நிர்ணயிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி பாப்டே, அந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நீதிபதி ஒருவரை ஆபாசமாக சித்திரித்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய சென்னையை சேர்ந்த மருதாச்சலம் என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கியது. மேலும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டும் என தமிழக டி ஜிபிக்கு உத்தரவிட்டது.
சமீபத்தில் சென்னை டாக்ஸ் பிரச்சனை பூதாகரமானது. பெண்களுக்கு பணம் கொடுத்து அவர்களை ஆபாசமாக பேசதை அதனை யூடியூபில் பதிவிட்டு வியூஸ் அள்ளும் வெட்கக்கேடான செயல் அரங்கேறியது. பின் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் அந்த சேனலின் நிறுவனர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சர்ச்சை தமிகத்தில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இதைச் சுட்டிக்காட்டி பேஸ்புக், யூ டியூப், வாட்ஸப் போன்ற சமூக ஊடகங்களின் பதிவுகளை தணிக்க செய்ய வேண்டும் என கூட உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவின் மீது சம்மந்த பட்ட அந்த நிறுவனங்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பினர்.
இப்படி நீதிமன்றத்தின் சார்பில் ஆயிரம் உத்தரவுகள், ஆயிரம் நோட்டிஸ்கள், ஆனால் எதற்கும் பேஸ்புக், வாட்ஸப், போன்ற கும்பகர்ணன்கள் அசைந்து கொடுக்கவே இல்லை.
திடீரென ஒரு நாள் வாட்ஸப் நிறுவனம் தவறான தகவலை கண்டறியும் வகையில் கோடிங் எழுதி அனுப்பும் நபர்களுக்கு இந்திய மதிப்பில் 34 ஆயிரம் வழங்கப்படும் என்று தாமாக முன் வந்து அறிவித்தது. ஆனால் அதன் பிறகு மூச்சும் இல்லை பேச்சும் இல்லை. உண்மை என்னவெனில் இணைய குற்றங்களை எப்படி கையாளுவது என எவருக்கும் புலப்படவில்லை. சம்மந்தப்பட்ட நிறுவனம், நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, பாதிக்கப்பட்ட மக்கள் என எல்லோருக்குமே எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைதான்.
பொய்ச்செய்தி, ஆபாசம், வதந்தி, வன்மம் ஆகியவற்றின் நிரந்தர முகவரியாக சமூக ஊடகங்கள் இருந்தாலும் சமூகத்தில் அவை தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். குறுகிய நேரத்தில் கோடிக்கணக்கான பேரை சென்றடையும் அதன் வீச்சு வேறெந்த ஊடகமும் தொட முடியாத உச்சம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதல் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வரை சமூக ஊடங்கள் செலுத்திய தாக்கம் என்பது மிகப் பெரியது.
”ஓடவே ஓடாது என்று சபிக்கப்பட்ட திரைப்படங்கள் சக்கை போடு போட்டதின் பின்னனியில் சமூக ஊடங்கள் இருந்திருக்கின்றன. வளர்ந்து வரும் திறமையாளர்கள், தொழில் முனைவோர்கள் என எத்தனையோ பேருக்கு வாழ்வளித்த ஏணி வலைதள ஊடகங்கள்தான். ரஜினி, கமல், விஜய் போன்ற சிலர் மட்டும் பிரபலங்களாக இருந்த சமூகத்தில் ஜிபி முத்து போன்ற அறியாத சாமானியனையும் ஆட்டோகிராப் போடுகிற பிரபலமாய் உயர்த்தும் வல்லமை பொருந்தியவை இணைய ஊடகங்கள்.
"முன்னாள் நண்பர்கள் நட்பு வளர்க்கவும் இன்னாள் நண்பர்கள் அரட்டை அடிக்கவும் உதவும் ஒரு தளம்" என்ற நிலையை கடந்து ஒரு நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் அளவிற்கு வல்லமை பொருந்தியவையாக மாறியிருக்கின்றன வலைதளங்கள். ட்ரம்ப் 4 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க அதிபரானாதும் இன்று அவர் வெள்ளை மாளிகையில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதும் உலக அரங்கில் சமூக ஊடகங்கள் செலுத்தும் ஆதிக்கத்தின் அளவுகோல். இந்தியாவில் திரிபுரா எனும் கம்யூனிஸ்ட் கோட்டை தகர்க்கப்பட்டதும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி எனும் இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டதும் சமூக ஊடகங்கங்கள் சாதனைக்கு சான்று.
ஆம்.....சமூக ஊடகம் சர்வ வல்லமை பொருந்தியவை. அது, அச்சு முதல் காட்சி வரை அனைத்து ஊடகங்களையும் ஒரு திமிங்கலத்தை போல விழுங்கி செரித்து நிற்கிறது. மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இந்த டிஜிட்டல் மீடியாக்கள் எந்த இடத்தில் சறுக்குகிறது எனில் அதன் நம்பகத்தன்மை....? பாரம்பரிய ஊடகங்கள் என்பது சமூகப் பொறுப்பு நிறைந்த ஒரு கட்டுமானம். அதில் ஓட்டைகள் இருக்கலாம், விரிசல்கள் மேவலாம். ஆனால் நம்பகத் தன்மை என்று வரும் போது அவை இணைய ஊடகங்களை இடது கையால் தள்ளி கம்பீரமாய் களத்தில் நிற்கின்றன.
இது தொடர்பான விவாதங்கள் வரும் போது பலர், வதந்தி பரப்புவோர்தான் ”வருந்த வேண்டும்....திருந்த வேண்டும்" என்று வாதிடுகிறார்கள். ஆனால் இதன் இன்னொரு கோணத்தை எடுத்து வைக்கிறது மருத்துவ உலகம். ”மனித சமூகம்.....குரூரம், வன்மம், சபலம், வதந்தி போன்றவற்றிக்கு பழகி விட்டதாக பகீர் கிளப்புகிறார்கள் மருத்துவர்கள். "habituation" என்னும் இந்த நோயில் இருந்து மீள்வதற்கு ”டி ஷர்ட்” ரூலுக்கு மனிதர்களை பழக்க வேண்டும் என்கிறார்கள்.
அது என்னவெனில் மனிதர்கள், தாங்கள் சமூகத்தின் பொது வெளியில் அணிந்து செல்லும் டி ஷர்ட்டுகளில் என்ன வாக்கியங்களை எழுதுவோமோ, அது மாதிரியான வார்த்தைகளையே சமூக ஊடங்களிலும் உபயோகித்து பழக வேண்டும். வதந்திகளையோ, வன்மத்தையோ, ஆபாசத்தையோ ஒருவன் தனது டி ஷர்ட்டில் எழுதி கொண்டு ஊருக்குள் வலம் வருவானா... ? எனில் ஏன் திரைமறைவில் மட்டும் மனிதன் ஏன் மிருகமாகிறான் என்பதை ஒவ்வொருவரும் யோசிக்க வைப்பது இந்த பயிற்சியின் நோக்கம்.
இன்னொரு புறம், திருடனாய் பார்த்து திருந்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்று விமர்சனத்தை முன் வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். கொலைகாரனே கொலை செய்வதை நிறுத்தட்டும் என எப்படி கை கட்டி வேடிக்கை பார்க்க முடியும்..? அப்படியெனில் காவல் துறை என்ற கட்டமைப்புக்கே அவசியம் இங்கு இல்லாது போயிருக்குமே. பயிற்சி, முயற்சி போன்ற தனிநபர் சார்ந்த விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும் இதுபோல குற்றங்களை தடுக்க சம்பந்தபட்ட நிறுவனங்கள்தான் சரியான நடவடிக்கை எடுக்க முடியும் என்பது அவர்கள் வாதம்.
பேஸ்புக், வாட்ஸப் போன்ற பெரு நிறுவனங்கள் பயனர்களின் டேட்டாக்களை திருடுவதிலேயே குறியாக இருக்காமல் தவறான தகவல்களை தணிக்கை செய்வதற்கான சரியான மார்க்கத்தையும் கண்டடைய வேண்டும். அதற்கான தொழில் நுட்பங்களை மேம்படுத்தும் ஒன்றுதான் சமூக ஊடகத்தின் மீதான சாபம் விலக ஒரே வழி என்கிற குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கிறது.
பேஸ்புக், வாட்ஸப் குறித்த வழக்குகள், நீதிமன்ற விசாராணை வரும் போதெல்லாம் இணைய பெருமுதலைகள் இயலவில்லை என்று கைவிரிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளன. ஆனால் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் செய்தியை ஆண்டிப்பட்டிக்கு அடுத்த நொடியில் கொண்டு சேர்க்க ஒரு நிறுவனத்தால் முடியுமெனில் அவர்களுக்கு இதெல்லாம்,
”ஜூஜூபி”
Successfully posted