ஜாதி மத பேதமின்றி 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்!

Feb 15, 2021 04:32 PM 2831

மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த 123 ஜோடியினருக்கு, அதிமுக சார்பில் இலவச சர்வசமய திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

கோவை பேரூரில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சிக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். திருமணம் செய்துகொண்ட மணமக்களுக்கு, தங்கத் தாலி உட்பட 73 வகையிலான சீர்வரிசைப் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன.

 

 

மேலும், திருமணத்தில் பங்கேற்ற அனைத்து மதத்தினருக்கும், அவரவர் முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில், வேத மந்திரங்கள் முழங்க மணமகளுக்கு, மணமகன் தாலி கட்டினார். அதேபோல், இஸ்லாமிய மணமக்களுக்கு குர்ஆன் ஓதப்பட்டு, திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ மணமக்களுக்கு, பைபிள் வாசகங்கள் வாசிக்கப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டன.

 

 

அதனைத் தொடர்ந்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமை உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், இதுவரை உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ள ஸ்டாலின், மக்களுக்காக எதையுமே செய்ததில்லை என விமர்சித்ததோடு, அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை சார்பாக 100க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

 

 

தொடர்ந்து நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மணமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார். மேலும் பேசிய அவர், அதிமுக தொடர்ந்து சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு வழங்கி வருவதாகவும், 16 வருடங்கள் திமுக-காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தும், தமிழகத்திற்கு அதனால் எந்த பலனும் இல்லை எனவும் தெரிவித்தார்.

 

 

Comment

Successfully posted