ஓடும் காரில் படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு - திடீரென மாயமானதால் கார் உரிமையாளர் அதிர்ச்சி

Nov 11, 2018 05:43 PM 528

கோவையில் பிஎம்டபிள்யூ காரின் பானெட்டில் ஒளிந்திருந்த பாம்பு, படமெடுத்து ஆடி உரிமையாளரை உறைய வைத்தது. திருப்பூரை சேர்ந்த விக்னேஷ் ராஜா என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர் கோவையில் உள்ள தனது உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு தனது காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.

முத்தூர் அருகே வரட்டுக்கரை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது திடீரென காரின் முன்பக்க கண்ணாடி மீது 5 அடி நீள நாகம் ஒன்று படமெடுத்து ஆடியது. உடனே அவர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்த போது பாம்பு மாயமாய் மறைந்து போனது. இதனால் அதிர்ந்து போன விக்னேஷ் ராஜா உடனடியாக கோவையில் உள்ள கார் நிறுவனத்துக்கு தனது காரை ஓட்டிச் சென்றார். அங்கு அவர்கள் சோதனை நடத்திய போது எஞ்சின் பகுதியில் பாம்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான சஞ்சய் வரவழைக்கப்பட்டார். அவர் ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்தார். பின்னர் அந்தப் பாம்பு வனப் பகுதியில் விடப்பட்டது. சினிமாவில் வில்லனை தாக்குவதற்கு செல்லும் சாமி பாம்பு, திடீரென காரின் முன்புறமோ அல்லது கார் மேலோ வந்து நிற்பதை பார்த்துள்ளோம். அந்தக் காட்சிகளை நினைவுப்படுத்தும் விதமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Comment

Successfully posted