பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிப்பு - செயலாளர் சிந்துஜா கைது!

Oct 11, 2020 11:09 AM 2677

சிதம்பரம் தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்த விவகாரத்தில், ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதேபோன்று 5வது வார்டு கவுன்சிலர் சுகுமாறனும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தெற்குதிட்டை கிராமத்தில் புவனகிரி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

சிதம்பரம் தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருபவர் ராஜேஸ்வரி.... இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால், ஊராட்சி மன்றக் கூட்டங்கள் நடைபெறும்போதெல்லாம் அவமதிக்கப்படுவது அரங்கேறி வந்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 17ம் தேதி நடைபெற்ற ஊராட்சிக் கூட்டத்தில் ராஜேஸ்வரி, அவமதிக்கப்பட்டதோடு, இருக்கை வழங்காமல் தரையில் அமர வைக்கப்பட்ட கொடூரமும் அரங்கேறியது. தீண்டாமை கொடுமை ஊராட்சி மன்றக்கூட்டங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பியது

image

இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி மன்றச் செயலாளர் சிந்துஜா ஆகியோர் மீது எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராஜேஸ்வரியை அவமதித்த குற்றத்திற்காக ஊராட்சிமன்ற செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திமுகவை சேர்ந்த ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ், ஜாதி பெயரை கூறி தொடர்ந்து அவமதித்து வந்ததாக பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜேஸ்வரியை தொடர்ந்து, தெற்கு திட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர் சுகந்தி என்பவரும், தன்னை தரையில் அமரவைத்து அவமதிப்பு செய்தாக குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் பணியாற்றும்போது, தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன்ராஜ் அடக்குமுறையை கையாண்டதாகவும் குற்றம்சாட்டினார்.

தீண்டாமை கொடுமை தொடர்பாக ஊராட்சிமன்றத் தலைவர் ராஜேஷ்வரி, ஊராட்சிமன்ற ஒன்றாவது வார்டு உறுப்பினர் சுகந்தி மற்றும் மாற்று சமூகத்தை சேர்ந்த 5 ஊராட்சி உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மோகன் ராஜ், விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜாவை விசாரணைக்குப் பின்னர் காவல்துறையினர் கைது செய்தனர். 

Comment

Successfully posted