வட்டிக்கு வட்டி -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

Oct 03, 2020 02:27 PM 508

2 கோடி ரூபாய்க்கு குறைவாக கடன் பெற்றவர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டதால் கடன் தவணைத் தொகையை செலுத்த கால அவகாசம் அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. எனினும் சில வங்கிகள் இந்த கால கட்டத்தில் வட்டிக்கு வட்டி விதித்து அவற்றை செலுத்த வாடிக்கையாளர்களை நிர்பந்தித்து வருவதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதற்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்ற தனிநபர்கள், நிறுவனங்களுக்கு வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2 கோடிக்கும் குறைவான தொழில்நிறுவன கடன்கள், கல்வி கடன், வீட்டுக்கடன், கடன் அட்டை, வாகனக் கடன், தனி நபர் கடன், வீட்டுப் பொருட்களுக்கான கடன்களுக்கு 6 மாத காலத்திற்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted