கொரோனா தடுப்பூசிக்காக காலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம்

Jun 20, 2021 08:36 PM 502

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், தட்டுப்பாடு காரணமாக கொரோனா தடுப்பூசி கிடைக்காததால் காலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை 70 முதல் 90 மையங்களில் நடைபெற்று வந்த சிறப்பு முகாம்கள், தற்போது 10 முதல் 40 மையங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது.

தற்போது 4ஆயிரத்து 900 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களும், 2ஆயிரத்து 500 கோவாக்சின் தடுப்பூசி டோஸ்களும் இருப்பு உள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் 40 சிறப்பு மையங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால் எந்தெந்த மையங்களில் எத்தனை தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என்பதை அறிவிக்காததால், அனைத்து மையங்களிலும் பெருமளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.

நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தடுப்பூசி இருப்பு குறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதால் காலை முதல் காத்திருந்த பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.

ஆத்திரமடைந்த சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Comment

Successfully posted