வாட்சன் - டூ பிளசிஸ் ஜோடி மிரட்டல் - பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சி.எஸ்.கே வெற்றி!

Oct 05, 2020 06:34 AM 902

 13-வது ஐ.பி.எல்.போட்டிகள் துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில், சி.எஸ்.கே. - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி அணிக்கு துவக்கம் கொடுத்த கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இணை முதல் விக்கெட்டுக்கு 61 ரன்களைச் சேர்த்தது. மயங்க் அகர்வால் 8வது ஓவரில் வெளியேற, மன்தீப் சிங் கே.எல்.ராகுலுடன் கைகோர்த்தார். அவர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தொடர்ந்து வந்த பூரானும் பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்காமல் வெளியேறினார்.

ஒருபுறம் கே.எல்.ராகுல் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை ஏற்றினார் . பின் அவரும் வெளியேற 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்களைச் சேர்த்திருந்தது பஞ்சாப்.

image

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சி.எஸ்.கே அணிக்கு வாட்சன், டூ பிளசிஸ் இணை துவக்கம் கொடுத்தது. முந்தைய போட்டிகளில் ஏமாற்றத்தைக் கொடுத்த இந்த இணை, நேற்றைய ஆட்டத்தில் வெறித்தனத்தைக் காட்டியது.

பஞ்சாப் பவுலர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்ட வாட்ஸன் 53 பந்துகளில் 83 ரன்களையும், பினிஷிங் செய்த டூ பிளசிஸ் அதே 53 ரன்களில் 87 ரன்களையும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல், அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இருவரையும் வெளியேற்ற முடியாமல் பஞ்சாப் பவுலர்கள் திணறியது, அந்த அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சி.எஸ்.கே புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தைப்பெற்றுள்ளது.

Comment

Successfully posted