சென்னையில் தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த தோனி!

Mar 07, 2020 03:37 PM 21770

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை வந்துள்ள தோனி சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் திரைப்படம் பார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வரும் மார்ச் 29ம் தேதி முதல் ஐபிஎல் திருவிழா தொடங்குகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் எதிர்பார்க்கும் இப்போட்டியில் விளையாடுவதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் ஆதர்ச நாயகனான தோனி சென்னை சேப்பாக்கம் விளையாட்டு அரங்கில் மார்ச் 2ம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பிறகு அவரை களத்தில் காணாமல், ஏங்கிப்போயிருந்த ரசிகர்கள், தோனி பயிற்சியில் ஈடுபடுவதை பார்ப்பதற்காகவே தற்போது சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்திற்கு தினமும் படையெடுக்கின்றனர். இந்நிலையில், 2016ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பாகி திரைப்படத்தின் மூன்றாவது பாகம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. ரிதேஷ் தேஷ்முக், டைகர் ஷெராஃப், ஷ்ரதா கபூர் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் ஒளிபரப்பாகிறது.

இதனையடுத்து, இத்திரைப்படத்தை காண்பதற்காக, நேற்று இரவு காட்சிக்கு சத்யம் திரையரங்கிற்கு திடீரென தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் வருகை தந்தனர். தோனி, சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரையும் கண்ட ரசிகர்கள் திரையரங்கினுள் ஆரவாரம் எழுப்பினர். பெரிய அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி, இருவரும் சர்ப்ரைஸாக திரையரங்கிற்கு வந்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் பாகி-3 திரைப்படத்தை பார்த்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comment

Successfully posted