லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் களமிறங்கும் கமல்ஹாசன்!

Sep 16, 2020 10:37 PM 1771

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கைதி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு அடுத்தடுத்த திரைப்படங்களுக்கான வாய்ப்புகள் வரிசையாக வந்த வண்ணம் உள்ளன. நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணமாக வெளியிடப்படாமல் உள்ளது. மாஸ்டர் திரைப்படத்திற்கு அடுத்து நடிகர் ரஜினியை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம்-2 க்குப் பிறகு திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படமும் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போகிறது. எனினும், அரசியல், பிக்பாஸ் நிகழ்ச்சி என்று நடிகர் கமல்ஹாசன் கவனம் செலுத்தி வந்தார். இந்தநிலையில் தான், இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கமல்ஹாசன் இணைந்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கமல்ஹாசனின் 232 வது திரைப்படம் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இப்படத்திற்கு ‘எவனென்று நினைத்தாய்’ என்று பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு, இப்படத்தின் First Look போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், ‘எவனென்று நினைத்தாய்’ திரைப்படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்டு, வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், கமல்ஹாசன் புதிய திரைப்படத்தில் இணைந்திருப்பதால், அவர் தேர்தலில் கவனம் செலுத்துவாரா அல்லது திரைப்படத்தில் கவனம் செலுத்துவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related items

Comment

Successfully posted