விருந்தில் போதைப்பொருள் பரிமாறலா? - புதிய சர்ச்சையில் கரண் ஜோகர்

Sep 19, 2020 03:26 PM 1580

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை வழக்கில், கரண் ஜோகர் பெயர் அடிப்பட்டது அடங்குவதற்குள், பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு போதைப் பொருள்களுடன் விருந்து அளித்ததாக வெளியான வீடியோவால் பாலிவுட்டில் மீண்டும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர் அளித்த விருந்தில், தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பாலிவுட் பிரபலங்கள் உட்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இது, நடிகை ரியா சக்ரபோர்த்தி கொடுத்த வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை பயன்படுத்தியதாக அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். ரியாவிடம் விசாரணை நடத்தியபோது, சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு போதைப்பழக்கம் இருந்ததாகவும், 80% பாலிவுட் பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தான், டெல்லியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மஞ்சிந்தர் சிங் சிர்சா புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பாலிவுட் இயக்குநரும், திரைப்படத் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், பாலிவுட் பிரபலங்களுக்கு தனது வீட்டில் அளித்த விருந்தின் போது, தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை பயன்படுத்தியதாகவும், அதுகுறித்து மும்பை காவல்துறையில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறி போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் புகாரளித்துள்ளார். அதற்கு ஆதாரமாக, 2019 ஆம் ஆண்டு கரண் ஜோகர் வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

தீபிகா படுகோன், ஷாஹித் கபூர், ரன்பீர் கபூர், அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள அந்த வீடியோ, பாலிவுட் திரையுலகம் போதையில் தத்தளிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Comment

Successfully posted