சென்னையில் முழு ஊரடங்கா? உண்மை என்ன? சென்னை மாநகராட்சி ஆணையர் பதில்

Apr 03, 2021 11:46 AM 4494

கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று ஊகங்களும் புரளிகளும் பரவி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் முழு ஊரடங்கு என்று செய்திகள் சமூக வலைதளங்களில் உலவத் தொடங்கிவிட்டன. உண்மை அறியாமல் ஆயிரக்கணக்கானோர் இதைப் பரப்பவும் தொடங்கி விட்டனர். இந்நிலையில் இதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டியது அவசியமாகிறது. 

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. அதேபோல மக்களும் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், முழு ஊரடங்கு தொடர்பான அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை. 

இது தொடர்பாக விளக்கம் பெற சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷைத் தொடர்பு கொண்டது நியூஸ்ஜெ. அவர் தெரிவித்ததாவது:  “இது முழுக்க முழுக்க பொய்ச்செய்திதான். அப்படி ஏதும் கிடையாது. பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனரே தவிர முழு ஊரடங்கு ஏதும் கிடையாது.

இது போன்ற பொய்த் தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுபோன்ற பேரிடர்க்காலங்களில் முடிந்தவரை முழுமையான உண்மையைத் தெரிந்துகொண்டு பகிர்வதே ஒரு நல்ல குடிமகனின் கடமை. உறுதி செய்யப்படாத தகவல்களைப் பொதுமக்கள் பகிர்வதைக் குறைக்க வேண்டும். 

Comment

Successfully posted