விவாகரத்து கேட்ட மனைவிக்கு கத்திக்குத்து - வெளியான பரபரப்பு காட்சிகள்

Oct 06, 2020 06:43 PM 1179

விவாகரத்து கேட்டு நோட்டிஸ் அனுப்பிய மனைவியை, கணவன் கத்தியால் சரமாரியாக குத்தும் சி.சி.வி.டி. காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் திருமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி ஜோஷி. இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத் தகராறு காரணமாக இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன், விவாகரத்து கேட்டு கணவன் சதீஷுக்கு, ஜோஷி நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இதனால் ஜோஷியுடன் சதீஷ் அவ்வப்போது வாக்குவாதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஜோஷி பணிபுரியும் தனியார் நிறுவனத்துக்குச் சென்ற சதீஷ், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.

சத்தம் கேட்டு விரைந்து வந்த சக பணியாளர்கள் சதீஷின் கொலைவெறி தாக்குதலில் இருந்து ஜோஷியை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, தப்பியோட முயற்சித்த சதீஷை, சக பணியாளர்களும் பொதுமக்களும் பிடித்து தாக்கினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சதீஷை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவகரத்து கேட்டதற்காக மனைவியை கொலை செய்யும் முயற்சியுடன் கணவன் கத்தியால் குத்தும் காட்சிகள் சி.சி.டி.வி.-யில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted