குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியல் வாழ்வை விட்டு வெளியேறுகிறேன் - பொள்ளாச்சி ஜெயராமன் அதிரடி

Jan 12, 2021 07:06 AM 2664

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் திமுகவினரின் செயல்களைக் கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுகவினர் ஓட்டுக்காக பொய்ப்பிரசாரம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென எச்சரித்தார். சட்டமன்றத் தேர்தலுக்காக பொள்ளாச்சி பாலியல் வழக்கை திமுக கையில் எடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதிமுகவில் கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று கூறிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற கொள்கையிலிருந்து அதிமுக ஒருபோதும் நழுவாது என்றும் உறுதியளித்தார்.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி வழக்கில் ஸ்டாலின் தன் மீது வைத்துள்ள குற்றச்சாட்டிற்கு சிறு ஆதாரமாவது இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியல் வாழ்வை விட்டு வெளியேறுவதாகவும், முடியாவிட்டால் திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்யத் தயாரா என்றும் சவால் விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் திமுக மாவட்ட செயலாளர் மீதும், அவர் மகன் மீதும்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டாலினை கருணாநிதியால் கூட முதலமைச்சர் ஆக்க முடியவில்லை, ஆனால் உதயநிதி முதலமைச்சராக்கி விடுவேன் என பேசுவது வேடிக்கையாக உள்ளதாக அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா கூறினார். ஸ்டாலினால் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது என்பதை அவரது சகோதர் மு.க.அழகிரியே தெளிவாக கூறிவிட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

வீட்டிற்குள் கூட கொள்கையை பேச முடியாத ஸ்டாலின், மக்களிடம் நாத்திக கொள்கைகளை புகுத்த முயற்சிக்கலாமா என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.

Comment

Successfully posted