இனியும் இது தொடர வேண்டாமே.. - சர்வதேச பெண் குழந்தைகள் தினம்!

Oct 11, 2020 07:42 AM 6671

பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்புகளை அளித்து, அவர்களை சாதனையாளர்களாக்கி அழகு பார்த்துவரும் சமூகம், அவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக நிற்க வேண்டியதன் அவசியத்தை நினைவுகூறும் விதமாக, பெண் குழந்தைகள் தினத்தை கடைபிடித்து வருகிறது.

பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு சுமை என்ற கருத்தை மாற்றியமைக்கும் முயற்சியாக, அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐ.நா. அறிவித்தது. உலகில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என்றும், அதன் மூலம் சமூகம் முன்னேறும் என்றும் வலியுறுத்துகிறது ஐ.நா. இந்நாளில், உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. கத்துவா, உன்னாவ், ஹத்ராஸ் போன்ற சிறுமிகளுக்கு எதிரான கொடூர சம்பவங்கள், இந்நாளுக்கான முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகெங்கும் இதுபோன்ற கொடூர செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பெண் சிசுக்கொலை ஒரு உலகளாவிய கொடுமையாக அரங்கேறும் நிலையில், அதே காரணத்தால் இந்தியாவில் சராசரியாக 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் என்ற நிலை உள்ளது. இந்தியாவில், வறுமை, ஆண் குழந்தை வேண்டும் என்ற மனப்பாங்கு, பெண் குழந்தைகளுக்கு செய்யப்படும் சடங்கு செலவினம் போன்றவை, பெண் சிசுக் கொலைக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதை தடுக்க, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் 1992-ம் ஆண்டு ``தொட்டில் குழந்தை திட்டம்'' என்ற மகத்தான திட்டம் கொண்டுவரப்பட்டது. உலகம் போற்றும் இத்திட்டம், இன்றும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், குழந்தைத் திருமணம் என்பது சர்வ சாதாரணம். 20 ஆண்டுகளுக்கு முன், பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்ட ஒன்று. ஆனால், தற்போது இவைகளில் இருந்து ஓரளவிற்கு மீண்டு வந்தாலும், இன்னும் பெண் குழந்தைகளுக்கு எதிராக தொடரும் குற்றங்கள், நம்மை கவலையடையச் செய்கின்றன. மகள்களை பெற்ற அப்பாக்கள் மட்டுமல்லாது, அனைத்து ஆண்களுமே பெண் குழந்தைகளுக்கு பாதுகாவலர்களாக இருந்தால் மட்டுமே, சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியும்.

 

Comment

Successfully posted