ட்விட்டரைக் கலக்கும் ஜம்புத்தீவு பிரகடனம்... என்ன? ஏன்?

Jun 16, 2021 10:36 AM 3714

இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்…

இப்படிக்கு,

மருது பாண்டியன், 

பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி. (ஜம்புத்தீவு பிரகடனத்திலிருந்து )

 

ஆன்லைனில் தினசரி ஒரு செய்தியை பேசுபொருளாக்கி, அதை ட்ரெண்டிங்குக்குள் கொண்டு வந்துவிட்டால் அதனை சாதனையாகக் கருதும் மனநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,  இன்றைய நாளுக்காக ட்ரெண்டிங்காக  “ஜம்புத்தீவு பிரகடனம்” என்ற தனியடைவு (ஹேஷ்டேக்) பரவி வருகிறது. அது என்ன ஜம்புத்தீவு? பார்க்கலாம். 

இந்திய விடுதலைக்கான போர்களில், 1806 வேலூர் கலகம்.  1857 மீரட் கலகம் (சிப்பாய் கலகம்) ஆகிய இரண்டையும் விட காலத்தால் முந்தியது மருது பாண்டியரின் ஜம்புத்தீவு மீட்புப்போர்.

ஆங்கிலேயருடன் நடந்த போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டபின், அவரது மனைவி ராணி வேலுநாச்சியாருக்கு உதவியாக இருந்து சிவகங்கை மண்ணை மீட்க உதவினார்கள் மருது பாண்டியர்கள். குறிப்பாக, மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, மறைந்த திப்புவின் தளபதி தூந்தாகி வாக் ஆகியோருடன் ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினார்கள், இது ஆங்கிலேயருக்கு கடும் கோபத்தை உருவாக்கியது.

இந்த சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக, திருச்சியில் மருது பாண்டியர்கள் வெளியிட்ட அறிக்கைதான் ஜம்புத்தீவு பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இந்திய தீபகற்பத்தை அப்போதைய பாளையாக்கார மரபு ஜம்புத்தீபகற்பம் என்று வட்டாரபிரயோகமாக அழைத்து வந்தது. 

அதே போல, ஒவ்வொரு ஆண்டும் மருதிருவர் ஜெயந்தி, நினைவுநாள் ஆகிய தினங்களில் மட்டும் கேட்கும் இந்த வார்த்தைகள் இன்று கேட்பதற்கு காரணம், 1801ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதிதான் இந்த பிரகடனம் வெளியிடப்பட்டது. 

அன்றைய நாளில் நோக்கம் உயர்ந்தது என்றபோதும், இன்று இணையத்தில் நடக்கும் பரவல்கள் அனைத்தும் சுயசாதிப்பெருமை தொனிப்பதாகவே இருக்கிறது என்பதும் சமூக பார்வையாளர்களின் கவலையாக இருக்கிறது. பொதுத்தலைவர்களை பெட்டிக்குள் அடைக்கும் வேலையாகவே இந்த ட்வீட்டுகள் பார்க்கப்படுகின்றன என்பதும் இணையவாசிகள் பெற வேண்டிய தெளிவு.  

 

என்ன இருந்தது அந்த பிரகடனத்தில்? 

ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள்.

உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும்.

இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும். அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்… ஆதலால்….. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்…

இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்… இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது… இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!….

இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்…

இப்படிக்கு,

மருது பாண்டியன்

பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.

Related items

Comment

Successfully posted