ஜெயமோகனின் "கட்டண உரை"

Oct 14, 2018 10:43 AM 473

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இலக்கியக் கூட்டங்கள் என்பது பெரும்பாலாலும் காற்று வாங்கும் ஒரு கூடமாகவே காட்சியளிக்கும். சினிமா என்பது கேளிக்கை, இலக்கியம் என்பது வீண் என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் இங்கு மிகுதி. அதனால் தான் ஆகச்சிறந்த இலக்கியவாதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்த சூழ்நிலையில் தான் எழுத்தாளர் ஜெயமோகன் சவால் முயற்சியாக தன்னுடைய உரைக்கு கட்டணம் நிர்ணயிக்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளார். விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கொற்றவை, காடு போன்ற நாவல்கள் மூலம் அறம் போன்ற கட்டுரைத் தொகுதிகள் மூலமாகவும் தற்காலத்தின் முக்கிய எழுத்தாளராக உள்ளார். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் மிகப்பெரும் கதைத்தொகுதிகளாக எழுதி வருகிறார். அந்த வரிசையில் 19-வது புத்தகமாக திசைதேர் வெள்ளம் என்ற புத்தகத்தை நாள்தோறும் தமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

இதற்கிடையில் தொடர் பயணங்கள், சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் இலக்கிய கூட்டங்களில் பங்கேற்பது, திரைப்படங்களில் பணியாற்றுவது, ஆண்டுதோறும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் மூத்த படைப்பாளிகளை கவுரவிப்பது என பன்முக இலக்கிய ஆளுமையாக இருந்து வருகிறார். இதனால் இவர் பங்கேற்கும் கூட்டங்களில் ஓரளவு வாசகர்களை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதி நெல்லையில் கட்டணம் செலுத்தி அவருடைய உரையை கேட்கும் நிகழ்வு ஒன்றை முன்னெடுக்கிறார். நமது இன்றைய சிந்தனைமுறை உருவாகி வந்தது எவ்வாறு? என்ற தலைப்பில் அவர் உரையாற்ற உள்ளார். இதற்கு கட்டணமாக 150 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு இம்முயற்சி வெல்லும் எனத் தெரியவில்லை என்றும், சொல்லும்படியான வெற்றிகள் கிடைத்தால் இதனை தொடரலாம் என நினைப்பதாகவும் எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கல்வி என்பது கோடிகள் புரளும் ஒரு வியாபாரமாக உள்ளது, ஆனால் இலக்கியம் என்றும் ஈயத்தட்டையே ஏந்தி நிற்கிறது. இந்த நிலை மாறுவதற்கு எழுத்தாளர்கள் இந்த சமூகத்தின் சொத்து என்ற எண்ணமும், அவர்களை போற்ற வேண்டியது நமது கடமை என்ற உணர்வும் நமக்கு வரவேண்டும். அந்தவகையில் எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டியது தமிழ் சமூகத்தின் பொறுப்பாகும்.

Comment

Successfully posted