நாளை முதல் பணியைத் தொடங்குகிறது கலையரசன் விசாரணை ஆணையம்!

Nov 22, 2020 08:06 PM 432

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்கும் ஆணையத்துக்கு, கூடுதல் உறுப்பினர்கள் மற்றும் அலுவலகத்தை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சூரப்பா மீதான முறைகேடு புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, தொலைபேசி வாயிலாக புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விசாரணையை தொடங்க முறையான அலுவலகம் மற்றும் பணியாளர்களை அரசு நியமித்துள்ளது.

உயர்கல்வித்துறை துணைச் செயலாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி., சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர், ஓய்வு பெற்ற நிதித்துறை கூடுதல் செயலாளர் உள்பட, 5 பேரை புதிய உறுப்பினர்களாகவும், 8 பணியாளர்களையும் நியமித்து, உயர்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது.

மேலும், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பொதிகை இல்லத்தை, விசாரணை ஆணையத்தின் அலுவலகமாக ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், நாளை முதல் விசாரணை ஆணையம் தனது பணியை துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted