அமெரிக்க டாலேன்ட் ஷோவில் ஒலித்த மரணம் மாஸ் பாடல்!

Feb 20, 2020 11:02 AM 388

அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் பிரபல திறன் அங்கீகார நிகழ்ச்சியான ‘அமெரிக்கா’ஸ் கட் டாலண்ட்’ (america's got talent) தொலைக்காட்சி நிகழ்ச்சியில், இந்திய நடனக்குழு ஒன்று தமிழ்ப் பாடலுக்கு நடனமாடியதோடு முதல் பரிசையும் வென்றுள்ளது. 7கோடிக்கும் அதிகமான தொகையையும் பல கோடி ரசிகர்களையும் வென்ற அந்த இந்திய நடனக் குழுவினர் குறித்து விரிவாகக் காண்போம் இந்தத் தொகுப்பில்...

புதிய திறமைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் ‘கட் டாலண்ட்’ - என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்றது. உலகின் பல்வேறு நாடுகளின் தொலைக்காட்சிகளும் கட் டாலண்ட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளுக்கு சமூக வலைத்தளங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
 
அந்த வகையில், அமெரிக்காவின் என்.பி.சி. தொலைக்காட்சி கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ‘அமெரிக்கா’ஸ் கட் டாலண்ட்’ நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. இவ்வாண்டுக்கான அமெரிக்கா’ச் கட் டாலண்ட் நிகழ்ச்சியில் பங்கேற்க உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்த பங்கேற்பாளர்களில் 40 குழுக்கள் மட்டுமே நிகழ்ச்சியின் முதல்கட்டத்திற்குத் தேர்வாகினர். இவர்களில் அனைவரையும் வியக்க வைத்த ஒரு குழுவாக ‘வி அன்பீட்டபிள்’ (v.unbeatable) - என்ற பெயருடைய நடனக் குழு இருந்தது. இந்தியாவின் மும்பையில் உள்ள வசதி வாய்ப்பற்ற இளைஞர்கள் 29 பேரால் உருவாக்கப்பட்ட இந்த நடனக்குழு மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி குடிசைப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தது.
 
போட்டியின்போது, கட் டாலண்ட் நிகழ்ச்சிகளின் வரலாற்றில் இதுவரை யாரும் துணியாத நடன சாகசங்களை இவர்கள் நிகழ்த்தினார்கள். இவர்களது சில நடன அசைவுகள் நடுவர்களை அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்திற்கும் உள்ளாக்கின. இந்த நடனங்களின் வீடியோக்கள் யூ டியூபிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகின்றன.
 
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா கட் டாலண்ட் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் ‘பேட்ட’ தமிழ்த் திரைப்படத்தின் ‘மரணம் மாஸ் மரணம்’ பாடலுக்கு வீ அன்பீட்டபிள் குழு நடனமாட, அமெரிக்காவின் மேடையில் தமிழ் ஒலித்தது. அத்தோடு மட்டுமில்லாமல் இந்தப் போட்டியில் சிறந்த திறமைக்கான முதல் பரிசையும் இந்தக் குழு வென்றுள்ளது. இந்த முதல் பரிசு இந்திய மதிப்பில் 7 கோடியே 15 லட்சம் ரூபாயை உள்ளடக்கியது ஆகும்.
 
இந்தியர்களின் திறமையையும், தமிழையும் அமெரிக்க மேடையில் அரங்கேற்றிய ‘வீ அன்பீட்டபிள்’ நடனக் குழுவை பலவேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டிவருகின்றனர்.

Comment

Successfully posted