2 குழந்தைகளைக் கிணற்றில் வீசி விசம் குடித்த தாய் மட்டும் உயிர்பிழைத்தார் - தகாஉறவால் கொடுமை!

Sep 15, 2020 10:32 PM 1087

தகா உறவைக் கைவிடும்படி உறவினர்கள் கண்டித்ததால், இரட்டை குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று, விஷம் குடித்து தகா உறவு ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமஸ்ரீ என்பவருக்கு ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு 10 மாத இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன் உதய்குமார் என்பவருடன் ஹேமஸ்ரீக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது.

இதை அறிந்த உறவினர்கள் ஹேமஸ்ரீயைக் கண்டித்து தகா உறவைக் கைவிடும்படி அறிவுரை கூறினர். ஆனால் ஹேமஸ்ரீக்கு குடும்பத்தினர் கத்தியது காதில் விழவில்லை. தகா உறவைக் கைவிடும்படி குடும்பதினரும், உறவினர்களும் நெருக்கடி கொடுப்பதை ஹேமஸ்ரீ தன் தகாத ஜோடி உதயகுமாரிடம் தெரிவித்தார். இப்படியே போனால் தங்களைப் பிரித்துவிடுவார்கள் என்று எண்ணிய இருவரும் இரட்டைக் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

அதன்படி அதிகாலை வேளையில் சிந்தப்பர்த்திபள்ளி கிராமம் அருகே இருக்கும் கிணற்றில் ஆசையாய்ப் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளை தூக்கி வீசினார் ஹேமஸ்ரீ. கள்ளக்காதல் கண்ணை மறைக்க பிஞ்சு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் ஹேமஸ்ரீயும், உதயகுமாரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

காலை விடிந்ததும் அந்த வழியாகச் சென்றவர்கள், ஊர் மக்களுக்குச் சொல்ல காவல்துறையினருக்கு தகவல் போனது. சம்பவ இடதிற்கு வந்த காவல்துறையினர், குழந்தைகளின் உடல்களை மீட்டனர். உயிருக்குப் போராடிய நிலையில் முட்புதரின் அருகே கிடந்த தகா உறவு ஜோடியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைதனர்.

திருமணத்தை மீறிய தகாத உறவுகளில் எந்த சம்பந்தமும் இல்லாத, ஏதுமறியா குழந்தைகள் பலியானது சித்தூர் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Comment

Successfully posted