“நான் பட்டியலினத்துப் பெண்” - போலி சான்றிதழ் மூலம் வெற்றி பெற்ற பெண் எம்.பி

Jun 09, 2021 04:26 PM 3697

மக்களவை தேர்தலில் தனி தொகுதியில் போட்டியிட போலிச் சாதி சான்றிதழ் கொடுத்த வழக்கில் நடிகையும் மராட்டிய சுயேச்சை எம்பியுமான நவ்நீத் கவுரானாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. பிரபல தெலுங்கு, கன்னட நடிகையான நவ்நீத் கவுரானா, தமிழில் அரசாங்கம், அம்பா சமுத்திர அம்பானி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் உள்ள தனி தொகுதியான அமராவதியில் சுயேட்சையாக அவர் போட்டியிட்டார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அவருக்கு ஆதரவு அளித்ததை அடுத்து நவநீத் வெற்றி பெற்றார்.

ஆனால் நவ்நீத் கவுர் தன்னை பட்டியலினத்தவர் என்று போலியான சாதி சான்றிதழ் கொடுத்து வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக அமராவதியில் தோல்வி அடைந்த சிவசேனா வேட்பாளர் ஆனந்த ராவ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை உயர்நீதிமன்றம், நவ்நீத்தின் சாதி சான்றிதழை ஆய்வு செய்யும் குழு ஒன்றை அமைத்தது.

குழு நடத்திய ஆய்வில் நவ்நீத் அளித்த சாதி சான்றிதழ் போலி என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது சாதி சான்றிதழை ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றம், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. நவ்நீத் கவுராவின் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நவ்நீத் கவுராவின் சாதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அவரது எம்.பி. பதவி பறிபோகும் சூழல் உருவாகி உள்ளது.

Comment

Successfully posted