ஐ.பி.எல். 2020 - சென்னை அணியின் வெற்றிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை

Sep 19, 2020 09:30 PM 1482

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, இந்தாண்டுக்கான தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் முதல் தொடர் இதுவாகும்.

அபுதாபி, ஷேக் சையது அரங்கத்தில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில், பரம எதிரிகளான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

டாஸில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், டி காக்கும் களமிறங்கினர். தொடர் மற்றும் இன்றைய போட்டியின் முதல் ஓவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் தீபக் சாஹர் வீசினார். ஆட்டத்தின் முதல் பந்தை எதிர்கொண்ட ரோகித் சர்மா, பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கி வைத்தார். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மூன்றாவது ஓவரில் டி காக் மூன்று பவுண்டரிகளை விளாசினார். இறுதியில் ரோகித் சர்மா, டி காக் இணையை தீபக் சாஹர் பிரித்தார். 10 பந்துகளுக்கு இரண்டு பவுண்டரிகள் உட்பட 12 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா, 4 வது ஓவரின் 4வது பந்தில் சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு டி காக்குடன் சூர்ய குமார் இணைந்தார். ஐந்தாவது ஓவரின் முதல் பந்திலேயே அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த டி காக்கை அவுட்டாக்கினார் சாம் கரண். 20 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட 33 ரன்கள் விளாசியிருந்த டி காக் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நான்காவது விக்கெட்டுக்கு சவுரப் திவாரி களமிறங்கினார். இந்த இணை நிதானமாக விளையாடத் தொடங்கியது. இந்நிலையில், 8வது ஓவரின் 2வது பந்தில் சிக்ஸர் அடித்து இந்த தொடரின் சிக்ஸர் கணக்கை சவுரப் திவாரி தொடங்கி வைத்தார். 10 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை எடுத்தது. 11வது ஓவரின் முடிவில், 16 பந்துகளுக்கு, இரண்டு பவுண்டரிகள் உள்பட 17 ரன்கள் எடுத்திருந்த சூர்ய குமார் யாதவ், சாஹர் பந்துவீச்சில், சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஐந்தாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து தன் ரன் கணக்கை தொடங்கினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சவுரப் திவாரி 31 பந்துகளுக்கு, 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜடேஜாவின் பந்துவீச்சில், டு ப்ளெஸிசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 6வது விக்கெட்டுக்கு பொல்லார்ட் களமிறங்கினார். அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த ஹர்திக் பாண்டியா டு ப்ளெஸிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஏழாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய க்ரூனால் பாண்டியா 3 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 29 ரன்களை விட்டுக்கொடுத்திருந்த நிகிடிக்கு க்ரூனால் பாண்டியாவின் விக்கெட் ஆறுதலாக அமைந்தது. எட்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜேம்ஸ் பாட்டின்ஸன், பொல்லார்ட் இணையை நிகிடி பிரித்தார். 14 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோனியிடம் கேட்ச் கொடுத்து பொல்லார்ட் அவுட்டானார். அதே ஓவரின் 5வது பந்தில் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் எடுத்திருந்த பாட்டின்ஸன் டு ப்ளெஸிசிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்களை எடுத்தது. பும்ரா 5 ரன்களுடனும், ராகுல் சாஹர் 2 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில், நிகிடி 4 ஓவர்கள் பந்துவீசி 38 ரன்களை விட்டுக்கொடுத்து அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா, சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பியூஷ் சாவ்லா, சாம் கரண்ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் முரளி விஜய் ஆகியோர் களமிறங்குகிறார்கள்.

Comment

Successfully posted