மகாளய அமாவாசை - தமிழகம், புதுவையில் கொரோனாவிலும் தர்ப்பணம் !

Sep 17, 2020 06:10 PM 347

கொரோனோ தொற்றுப் பரவல் காலகட்டத்திலும் மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் பரவலாக இன்று முன்னோருக்கு தர்ப்பணம்செய்தனர்.

மகாளய அமாவாசையன்று அக்னி தீர்த்தக் கடற்கரையான இராமேசுவரத்தில் இலட்சக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக அதிகமாகக் கூட்டம் கூடத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், இராமேசுவரம் கடற்கரை வெறிச்சோடியது. ஆனாலும் இராமநாதசுவாமி உள்பட பல கோயில்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்துவருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள கூடுதுறை சங்கமேசுவரர் கோயிலிலும் தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டது. எனினும், சாமி தரிசனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தடைகளை மீறி ஆற்றில் நீராடிய பக்தர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளக்கரை, முக்கிய படித்துறைகளில் பக்தர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்ட நிலையில், நகரையொட்டிய காவிரி படித்துறைகளில் மட்டும் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கடலூர் மாவட்டம், வெள்ளி கடற்கரையில் தர்ப்பணம் கொடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. வெள்ளி கடற்கரைக்கு வருவதைத் தவிர்க்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி அறிவித்திருந்தார். அதனால், தர்ப்பணம் கொடுக்கவந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் மற்றும் ரங்கநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டும், இறுதிச்சடங்கு மண்டபத்தில் தனி நபர் இடைவெளியின்றி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தர்ப்பணம் கொடுத்தனர்.

புதுச்சேரி மாநில கடற்கரைப் பகுதிகளான காந்தி சிலை, குருசுக்குப்பம், வம்பாகீரப்பாளையம் உள்பட பல இடங்களில் அதிகமானவர்கள் தர்ப்பணம் கொடுத்து நீராடினர்.

Comment

Successfully posted