'பாடும் நிலா பாலு’ இனி பாடாதே!

Sep 25, 2020 02:04 PM 2098

கொரோனா தொற்றிலிருந்து மீண்டபோதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் இன்று காலமானார்.

ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்தது, ஆந்திராவில் உள்ள கொனேட்டாம் பேட்டை என்ற ஊரில்தான். எஸ்.பி.பியின் தந்தை எஸ்.பி.சம்பமூர்த்தி, தாய் சகுந்தலம்மா. இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் எஸ்.பி.பி-யின் உடன்பிறந்தவர்கள். திருப்பதியில் படிப்பை முடித்த பின் எஸ்.பி.பி. பாடல் மீதிருந்த ஆர்வத்தில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். படிக்கும் போதே இசைப்போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை பெற்றிருந்த எஸ்.பி.பி.க்கு திரைத்துறை ஆர்வத்தை ஏற்படுத்தியது, 1964-ல் தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் முதல் பரிசு வென்றது தான் திரையுலகை நோக்கி அவரை நகர்த்தியது. 1966 முதல் தெலுங்கு, கன்னட படங்களுக்கு பாடல்கள் பாடிவந்தவருக்கு, தமிழில் வாய்ப்பு கிடைத்தது 1969-ல்தான்.

தமிழில், ஜெமினி கணேசன் நடித்த “சாந்தி நிலையம்” திரைப்படத்தில்தான் எஸ்.பி.பிக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது. “இயற்கை என்னும் இளைய கன்னி” என் பாடலைப் பாடினார். ஆனால், ”சாந்தி நிலையம்” வெளியாவதற்கு முன்பே, எம்.ஜி.ஆர் நடித்த ’அடிமைப்பெண்’ திரைப்படம் வெளியானதால், எஸ்.பி.பி-யை உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தது ”ஆயிரம் நிலவே வா” பாடலே! தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு என பல மொழிகள் அவருக்கு அத்துப்படி. ”ஏக் துஜே கேலியே” விற்குப் பிறகு பாலிவுட்டையும் ஆக்கிரமித்துக்கொண்டார் எஸ்.பி.பி. ஒருநாளைக்கு 19 பாடல்களைப் பாடும் அளவிற்கு வளர்ச்சிபெற்றார்.

திரைப்பாடல்களுக்கென ஆறு முறை தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறார். தமிழ் இசையுலகைக் கட்டியாண்ட இளையராஜாவிற்கு மிக நெருக்கமான நண்பர். மற்ற எவரையும்விட இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடியதுதான் அதிகம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என பல மொழிகளில் ஆயிரம், இரண்டாயிரம் அல்ல நாற்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.

பாடல்கள் பாடுவது மட்டுமல்ல; நடிப்பும் எஸ்.பி.பிக்கு கைவந்த கலை. ’கேளடிக் கண்மணி’-யில் ராதிகாவுடன் இணைந்து நடித்தது, காதலன் திரைப்படத்தில் பிரபு தேவாவுக்கு தந்தையாக நடித்தது, ப்ரியமானவளே திரைப்படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்தது ஆகியவை மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.

கேளடி கண்மணி திரைப்படத்தில், “மண்ணில் இந்தக் காதலன்றி” பாடலை மூச்சுவிடாமல் பாடி, அனைவரையும் அதைப்போலவே ஒரு பாடலைப் பாடிவிடவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார். இந்த பாடல் இல்லாத இசைக்கச்சேரிகளே இல்லை எனலாம். இன்றுவரை இப்பாடலை அவரைப்போலவே பாடிவிடவேண்டும் என்பது ஒவ்வொரு பாடகருக்கும் சவாலாக இருக்கிறது. அதேசமயம், ’கேளடி கண்மணி’ போல் அல்லாமல், அமர்க்களம் திரைப்படத்தில் ’சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடல் முழுவதையும் மூச்சுவிடாமல் பாடியது எஸ்.பி.பியின் தனிச்சிறப்பு.

இளையராஜா மட்டுமல்லாமல், ரஹ்மான், அனிருத் வரை அடுத்தடுத்த தலைமுறைஇசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வந்திருக்கிறார். இந்த ஆண்டு வெளியான ’தர்பார்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாந்தாண்டா இனிமேலு’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்றுவந்தார் எஸ்.பி.பி. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா அறிகுறிகளுடன் ஆகஸ்ட் 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை அமைந்தகரையிலிலுள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ச்சியாக சிகிச்சைப்பெற்றுவந்த அவர், கடந்த 4-ம் தேதி கொரோனா தொற்றில் இருந்து மீண்டார். ஆனாலும், கொரோனா தாக்கத்தால் அவரது உடல்நிலை மோசமடைந்து இன்று மதியம் 1.04 மணியளவில் உயிரிழந்தார்.

Comment

Successfully posted