அமெச்சூர் கடத்தல்காரர்களும் - அதிரடி போலீசும்!

Aug 29, 2020 04:01 PM 815

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் மதனபுரம் பகுதியை சேந்தவர் தங்கராஜ் . இவர் அதே பகுதியில் ஜீவன் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்திவருகிறார்.... இவருக்கு நவஜீவன் என்ற 15 வயது மகன் உள்ளார்.

நேற்று நவஜீவன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒருவர் முகவரி கேட்பதுபோல் பேசிகொண்டிருக்க... காரில் இருந்து இறங்கிய மற்றொருவர் ஜீவனை மிரட்டி காருக்குள் ஏற்றி அவரை கடத்தி சென்றனர்... சிறுவனின் தந்தை தங்கராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், மகன் நவஜீவனை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றால் 5 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தங்கராஜ் கடத்தல் குறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் துரிதமாக விசாரணையைத் துவங்கிய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா அனைத்தையும் ஆய்வு செய்தனர். அதில் ஜீவனை காரில் கடத்தும் காட்சியும் பதிவாகியிருந்தது... காரின் எண் மற்றும் மர்மநபர் பேசிய செல்போன் எண் சிக்னலை வைத்து விசாரணையை தொடங்கினர்... அதில் நவஜீவனை கடத்திச்சென்ற கார், செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. தாமதிக்காமல் போலீசார் செங்கல்பட்டு அருகில் உள்ள மறைமலைநகர் பகுதிக்கு விரைந்து ஜீவனை கடத்திச் சென்ற கும்பலை காரோடு மடக்கி பிடித்தனர். அதில் கடத்தப்பட்ட ஜீவனை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் கடத்தலில் ஈடுபட்டவர்களை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது... கடத்தலில் ஈடுபட்டது தங்கராஜின் ஓட்டலில் வேலை பார்த்த முன்னாள் ஊழியரான 21 வயதான ஹரிகரன் என்பது தெரியவந்தது... இவர் தங்கராஜின் உறவினர் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், இதையறிந்த தங்கராஜ், ஹரிகரனை வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது... என்னுடைய காதலை பிரித்த உன்னுடைய மகனை கடத்துகிறேன் பார் என்று சமயம் பார்த்து கடத்தியதையும் ஹரிகரன் ஒப்புகொண்டார்...

இதையடுத்து ஹரிகரன், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர் விக்னேஷ் மற்றும் வாடகை கார் ஓட்டுநர் சரத்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். சிறுவன் கடத்தப்பட்ட 2 1/2 மணி நேரத்தில் சிறுவனை மீட்டும் கடத்திய அனைவரையும் பிடித்த காவல்துறையினருக்கு சிறுவனின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

Comment

Successfully posted