700 வீடியோக்களில் ஆபாச வார்த்தைகள்; சொகுசு வாழ்க்கை - பப்ஜி மதன் சிக்கியது எப்படி?

Jun 20, 2021 10:13 AM 554

பப்ஜி மதனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 700 வீடியோக்களில் ஆபாசமாக பேசியது உறுதி செய்யப்பட்டதால், மதனை14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மதன் பூந்தமல்லி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

 

 

 யூடியூப் வீடியோ சேனலில் பிரபலமான மதன் ஓர் என்ஜினீயரிங் பட்டதாரி. மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டை தனது யூடியூப் சேனலில் அரங்கேற்றி வந்த நிலையில், அதில் பெண்களை குறித்து ஆபாசமாக பேசி கருத்துகளை பதிவு செய்து வந்தார். இதனால் அவருக்கு லட்சக்கணக்கில் பணம் கொட்டியது. பெண்களை ஆபாசமாக பேசியது குறித்து தமிழ்நாடு முழுவதிலும் இருந்து புகார் குவிந்த நிலையில், மதன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதன் தலைமறைவான நிலையில், யூடியூப் சேனலுக்கு நிர்வாகியாக செயல்பட்ட அவரது மனைவி கிருத்திகாவை 8 மாத கைக்குழந்தையுடன் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில், புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதனை தொடர்ந்து தேடி வந்த போலீசார், தருமபுரியில் சுற்றி வளைத்து கைது செய்தனர். சென்னை அழைத்துவரப்பட்ட மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. யூடியூப் மூலம் மட்டுமின்றி, தனி நபர்களிடம் பேசி "கூகுள் பே" (( Google pay )) மூலம் பண பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், வங்கிக் கணக்கில் 4 கோடி ரூபாய், விலை உயர்ந்த 2 சொகுசு கார்கள், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் தலா 45 லட்சம் ரூபாயில் சொகுசு வீடுகள், தங்கம், வைர நகைகள் என, கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. இதற்காக ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்தாததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.... ஆடி சொகுசு கார், 4 லேப் டாப்கள், டிரோன் கேமரா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன....

பப்ஜி மதனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 700 வீடியோக்களில், அவர் ஆபாசமாக பேசியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மதனை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்த மதன் தற்போது பூந்தமல்லி சிறைச்சாலையில், கம்பிகளுக்குப் பின்னால்...!

Comment

Successfully posted