மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு

Oct 15, 2020 08:03 AM 762

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் மும்பை, புனே நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே கரையை கடந்த நிலையில், நேற்று மாலை காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கனமழை பெய்தது. புனேவில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நகரின் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன..

இதேபோன்று, மும்பையிலும் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பெரும்பாலான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே மும்பை மாநகரில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

புனேவில் இண்டாப்பூர் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் ஜே.சி.பி. மூலம் மீட்கப்பட்டார். வெள்ளத்தில் அந்த நபர் சிக்கி தவித்ததை அறிந்த உள்ளூர் வாசிகள், உடனடியாக ஜே.சி.பி. கொண்டு சென்று அவரை பத்திரமாக மீட்டனர்.

Comment

Successfully posted