சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்!

Sep 22, 2020 09:12 PM 1794

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல்.2020 தொடரின் 4வது போட்டி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே, சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். 6 ரன்களில் ஜெய்ஸ்வால் அவுட்டாக, ஸ்மித்துடன், சஞ்சு சாம்சன் இணைந்தார். இந்த இணை சென்ன அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. 19 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட அரைசதம் விளாசினார் சாம்சன். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இந்த இணை, 44 பந்துகளில் 100 ரன்களை சேர்த்தது.

32 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹரிடம் கேட்ச் கொடுத்து சஞ்சு சாம்சன் அவுட்டானார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்மித் 34 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள், அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து சாம் கரண் பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஆர்ச்சர், அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 27 ரன்களை விளாசினார்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆர்ச்சர் 27 ரன்களுடனும், டாம் 10 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் சாம் கரண் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர், லுங்கி நிகிடி, பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பியூஸ் சாவ்லா, நிகிடி ஆகியோர் 4 ஓவர்கள் பந்து வீசி முறையே 55 மற்றும் 56 ரன்களை விட்டுக்கொடுத்தனர்.

217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய் மற்றும் வாட்சன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

Comment

Successfully posted