இப்படியும் கஷ்டங்களை சொல்லலாம்

Feb 22, 2019 04:39 PM 1460

இலக்கியங்கள் என்பவை வலிமையாக எழுதப்பட்ட வாழ்வியல்கள். அதனாற்றான் காலம் கடந்தும் அவற்றால் நிலைபெற முடிகிறது. ஒரு மனிதனுக்கு அடுத்தடுத்து கஷ்டங்கள் வந்தால் அவனைப் பார்த்து பரிதாபப்படலாம். ஆனால் மனிதனுக்கு இப்படியுமா கஷ்டங்கள் தொடர்ந்து வரும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா ?

ராமச்சந்திர கவிராயரின் பாடல்களில் ஒன்றான இது பட்டியலிடும் கஷ்டங்களைப் பாருங்கள்.

ஏழை விவசாயி ஒருவரின் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்றிருந்தது.
அதே நேரம் மழையும் பெய்து கொண்டிருந்தது.
மாட்டுக் கொட்டகை செம்மையாக இல்லாததால் பிறந்திருந்த கன்று ஈரத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது.
பெய்த மழையில் குடியிருந்த மண் வீட்டின் முன்பகுதி இடிந்து விட்டது. இவற்றைச் சரி செய்யலாம் என்றால் உதவிக்கு ஆளில்லை.
விவசாயியின் மனைவி உடல் நலமில்லாமல் படுத்திருந்தாள். போதாக்குறைக்கு வேலைக்காரன் இறந்துவிட்ட செய்தி வேறு கிடைத்துள்ளது.
நிலத்தில் ஈரம் காய்ந்து போவ தற்குள் விதைத்துவிடலாம் என்று அவன் விதை நெல்லைத் தூக்கிக் கொண்டு ஓடினால், எதிரே பழைய கடன்காரன் வந்து நின்று கொண்டு கடன் பாக்கியைக் கேட்கிறான்.
அவனுக்குச் சாக்கு போக்கு சொல்லி சமாளித்து விட்டு அனுப்பி னால், அரசாங்க ஆட்கள் உழுது பயிரிட்ட பூமிக்கு நிலவரி கேட்டுப்பெறுவதற்கு வந்து நிற்கிறார்கள்.
ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றால், குருக்கள் வந்து உள்ளூர் கோவிலுக்கு உரிய காணிக்கைப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகுமாறு வற்புறுத்துகிறார்.
அவரையும் சமாளித்து அனுப்பினால், நேரம் காலம் தெரியாமல் உள்ளூர்ப் புலவர் ஒருவர் வந்து, கவிதை பாடி பரிசு தருமாறு கேட்கிறார்.
அந்த விவசாயிதான் என்ன செய்வான்? அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் ஒன்றா இரண்டா, ஒவ்வொன் றாகத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்தால் அவன்தான் என்ன செய்வான்?
ஏதும் சொல்ல முடியாத அளவுக்கு அந்த பாவிமகன் படுதுயரம் பார்க்கவே கொடுமையாக இருக்கிறதாம் .

ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக
மாஈரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க
பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே                - ராமச்சந்திர கவிராயர்

இவ்வளவு ரசனையாக இங்கே ஒரு கவிதை அவலங்களை அழகாக பட்டியலிடுகிறது. உண்மையில் ராமச்சந்திர கவிராயரின் வாழ்க்கையும் பெரும்பாலும் ஏழ்மையில்தான் கழிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் என்னும் தமிழ்வேத அறிவுரையையும் மனதில் கொண்டு செய்வன திருந்தச் செய்வோமாக.

Comment

Successfully posted