நிஜ வாழ்க்கை காதல் ஜோடிகள் !

Oct 23, 2018 04:15 PM 1869

ஒரு கதாநாயகன் பிரபலமாகத் தொடங்கிவிட்டால், அவருடைய ஜோடி யார் என்பதும், ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயமாக மாறிவிடும். அதற்கும் ஒருபடி மேலே போய், தங்கள் கதாநாயகனின் ஜோடியை அண்ணி என்று கூட அழைக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்படி, அந்த காலத்தில் தொடங்கி, இந்த காலம் வரை, ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பல சினிமா ஜோடிகள், நிஜ ஜோடிகளாக மாறியுள்ளனர்.

அதில், மிகப் பிரபலமான பாலிவுட், அதாவது ஹிந்தி திரையுலகத்திலும், கோலிவுட் என்று அழைக்கப்படும் தமிழ் திரையுலகிலும் உள்ள அந்த ஜோடிகள் யார் என்று பார்க்கலாம். பாலிவுட்டை எடுத்துக் கொண்டால், இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட ராஜேஷ் கண்ணா, ரசிகர்களை தன் அழகால் கிரங்கடித்த நடிகை டிம்பிள் கபாடியாவை மணந்தார்.

அதன்பின், அங்கு முன்னணி ஸ்டாராக விளங்கிய திலிப்குமார், அவருக்கு ஜோடியாக நடித் சாய்ரா பானுவை நிஜ ஜோடியாக மாற்றினார். பின்னர், பாலிவுட் சூப்பர் ஸ்டாராக மாறிய அமிதாப்பச்சன் நடிகை ஜெயா பாதுரி ஜோடியும் மிகப் பிரபலமான ஜோடியாக இருந்து, நிஜ ஜோடியாக மாறியவர்கள். அமிதாப்புக்கு இணையாக பாலிவுட்டை கலக்கிய தர்மேந்திரா, ஹீரோயின்களில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த ஹேமமாலினியை மணந்து கொண்டார்.

முதல் படமான பாபி படத்தின் மூலம், ரசிகர்கள் மனதில் காதல் நாயகனாக சிம்மாசனமிட்டு அமர்ந்த ரிஷி கபூர், நடிகை நீது சிங்கை மனந்து கொண்டார். இவர்களை போல், அக்ஷய் குமார், நடிகர் ராஜேஷ் கண்ணாவின் மகள், நடிகை ட்விங்கிள் கண்ணாவை மணந்துகொண்டார். நடிகர் அஜய் தேவுகன், ஒரு காலகட்டத்தில் பாலிவுட்டை கலக்கிய கஜோலை மணந்தார். சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் வாரிசு அபிஷேக் பச்சன், உலக அழகியாக போற்றப்படும் ஐஸ்வர்யா ராயை மணந்தார். இவர்களைப் போல், ஸ்டார் வாரிசுகளான சைஃப் அலி கானும், கரீனா கபூரும் நிஜ ஜோடிகளானார்கள். சமீப காலத்தில் இணைந்த ஒரு பிரபல ஜோடி, ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா.

இன்னும் பல ஜோடிகள் கொண்ட இந்த பட்டியலில், லேட்டஸ்டாக இணைய இருப்பவர்கள், ஹாலிவுட் வரை சென்று பிரபலமடைந்துள்ள தீபிகா படுகோன் மற்றும் தற்போது பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் ரன்வீர் சிங். அடுத்தாக, கோலிவுட் பக்கம் திரும்பலாம். தமிழ் திரைப்பட நிஜ ஜோடிகள் என்று சொன்னாலே, எல்லோர் மனதிலும் முதலில் வரும் ஜோடி, ஜெமினி கணேசன், சாவித்திரி ஜோடிதான். அந்த அளவிற்கு இவர்கள் ரசிகர்களை கவர்ந்த ஜோடி. ரசிகர்களுக்கு, அடுத்த ப்ரியமான ஜோடி என்று பார்த்தால், அஜித் மற்றும் ஷாலினி.

ஆனால், இவர்களுக்கு முன்பே, விஜயகுமார் - மஞ்சுளா, பாக்யராஜ் - பூர்ணிமா ஜோடிகளும் பிரபலம். இந்த பட்டியலில், ரசிகர்களுக்கு, குறிப்பாக பெண் ரசிகைகளுக்கு மிகவும் பிடித்த கதாநாயகனான சூர்யா, நடிப்பு புயல் ஜோதிகாவை திருமணம் செய்து, அவரை பெண்களின் எதிரியாக்கினார்.

இன்றைய ரசிகர்கள் மனதில் அம்மா வேடமென்றால் நினைவுக்கு வரும் சரண்யா, நடிகர் பொன்வண்ணனை மணந்துள்ளார். தமிழ் ரசிகர்களின் மனதில் கனவு நாயகியாக வலம் வரும் சமந்தா, நடிகர் நாகார்ஜுனாவின் வாரிசு நாக சைதன்யாவை மணந்துள்ளார்.

நாகார்ஜுனாவும், நடிகை அமலாவைத்தான் கரம் பிடித்தார். இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியிருக்கும் ஜி.வி. பிரகாஷ், தேன் குரலுக்கு சொந்தக்காரியான சைந்தவியை தனது நிஜ ஜோடியாக்கினார்.

நடிகர் பாபி சிம்ஹா, நடிகை ரேஷ்மிகாவும் நிஜ ஜோடிகள். இப்படி, திரைப்படங்களில் கலக்கும் காதல் ஜோடிகள், நிஜ வாழ்விலும் ஜோடிகளாக மாறுவது, அன்றிலிருந்து, இன்றுவரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னமும் தொடரும் என்று தான் தோன்றுகிறது.

Comment

Successfully posted