இசையுலக வித்தைக்காரன் - சந்தோஷ் நாராயணன்

May 15, 2019 04:13 PM 480

தமிழ் சினிமாவின் வளர்ச்சியால் இன்று பாடல்களே இல்லாமல் படங்கள் வெளிவருகிறது. ஆனால் பின்னணி இசை இல்லாமல் உங்களால் ஒரு படத்தை நினைத்துப் பார்க்க முடிகிறதா? தினம் ஒரு மெட்டு பிறக்கிறதோ இல்லையோ புதுப்புது இசையமைப்பாளர்களை திரையுலகம் கண்டுக்கொண்டே தான் இருக்கிறது. அனால் அதில் ஒரு சிலரைத்தான் கடைசி வரை சமூகம் நினைத்துப்பார்க்க வைக்கிறது.

2012ம் ஆண்டில் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற கானா பாடல்கள் "சந்தோஷ் நாராயணன்" என்கிற இசையமைப்பாளரை ஊரறிய வைத்தது. சரி..ஏதோ புதிதாக இருக்கிறதே என்று ஊர் உலகம் பேச அதே ஆண்டில் வெளியான மற்றோரு படமான "பீட்சா" திரைப்படம் மூலம் பின்னணி இசையில் கவனிக்கப்பட வைத்தார் சந்தோஷ்.

1983ல் இதே மே 15ல் திருச்சியில் பிறந்த சந்தோஷ் நாராயணன் ஜேஜே கல்லூரியில் படிப்பை முடித்தப்பின்னர் ஒலிப்பதிவு பொறியாளராக பணியாற்றினார். பின்னர் இண்டிபெண்டண்ட் இசை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பல பாடல்களுக்கு இசையமைத்தார். 2008ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான நேனு மீக்கு தெலுசா? படத்திலும் அதன் தமிழ் பதிப்பான என்னை தெரியுமா ? படத்திற்கும் பின்னணி இசையமைத்தார்.

2013ல் வெளியான சூதுகவ்வும் படத்தின் பின்னணி இசையும், ஜாலியான பாடல்களும் இவரின் இசைப்பயணத்திற்கு பாதை வகுத்துக் கொடுத்தது. சந்தோஷ் நாராயணனின் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஏ.ஆர்.ரஹ்மானின் "ஸ்லம்டாக் மில்லியனர்" படம் தான். அதனைப் பார்த்த பின்னரே தனது இசைக்கான பாதையின் வேர்களை தேடி செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். 2014ல் இவரது இசையில் வெளியான குக்கூ திரைப்படம் இவரின் பெயரை தமிழ் சினிமாவில் அழுத்தமாக பதிவு செய்தது. அந்த படத்தின் பாடல்கள் அந்த ஆண்டின் டாப்-10 ல் இடம் பிடித்தது. அவரின் இசைக்கென ரசிகர்கள் உருவானார்கள். அவரால் குக்கூ போன்ற மென்மையான கதைக்களமாக இருந்தாலும் சரி, சூதுகவ்வும் போன்ற அதிரிபுதிரியான களமாக இருந்தாலும் சரி தன்னால் சூழலுக்கு ஏற்றவாறு இசையமைக்க முடியும் என்பதை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்தார்.

சந்தோஷ் நாராயணனின் பாடல்களை கேட்டால் அவர் மேற்கத்திய இசையை நோக்கியே பயணிப்பது புரியும். ஆனால் அதில் சேர்க்கப்படும் வித்தியாசமான இசைகளே அவரை கவனிக்க வைக்கும். "ஜிகர்தண்டா" படமே அவரின் முழு திறமையையும் வெளிக்கொணர்ந்த படம் எனலாம். சிறந்த வில்லனுக்கான தேசிய விருதுப் பெற்ற அந்த படத்தின் வில்லனுக்கான பின்னணி இசை படம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும். அதே ஆண்டில் வெளியான மற்றோரு படமான "மெட்ராஸ்" படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் சொல்லிவைத்தாற்போல் ஹிட்டடித்தன. அவரின் படங்களில் வரும் ஒவ்வொரு பாடலையும் ஒரு ஒரு ஸ்டைலில் இசைக்கோர்த்து அழகு பார்த்திருப்பார் சந்தோஷ்.

இதன்பிறகு "எனக்குள் ஒருவன்", "36வயதினிலே", "இறுதிச்சுற்று", "காதலும் கடந்து போகும்", "மனிதன்" என தொடர்ச்சியாக இவரது இசையில் வந்த படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் தன்னை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்டிக்கொண்டார். 2016ல் ரஜினி நடிப்பில் வெளியான "கபாலி" திரைப்படத்திற்கு சந்தோஷ் இசையமைக்கப்போகிறார் என்ற தகவல் வர, அதுவரை உச்ச நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திராத சந்தோஷ் நாராயணன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யப் போகிறார் என எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் படத்தில் வரும் "நெருப்புடா...நெருங்குடா" எனும் பாட்டால் தமிழ்நாட்டையே பற்றி எரியவும் வைத்தார். "மாயநதி" எனும் பாடலால் உருகவும் வைத்தார். அதுதான் சந்தோஷ் நாராயணன். அதன்பிறகு விஜய்க்கு "பைரவா", தனுஷ்க்கு "கொடி", "வடசென்னை", மீண்டும் சூப்பர்ஸ்டாருடன் "காலா", பரியேறும் பெருமாள் என தன்னை படத்திற்கு படம் மெருகேற்றிக்கொண்டே வருகிறார்.

image

அவரின் படங்களை பார்த்தால் பாடல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இதனை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அதிலும் அவரின் 25வது படமான "வடசென்னை"யின் பின்னணி இசையைப் பார்க்கும்போது அப்படியே புல்லரிக்கும். அதே சமயம் இவர் பாடகராகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். அதில் அனைவரின் பேவரைட் லிஸ்ட்டில் இருப்பது பரியேறும் பெருமாளின் "கருப்பி" பாடல்தான். இவர் இந்த களத்திற்கு ஏற்ற இசையமைப்பாளர் என்று நாம் நினைக்கும் போது, அதன் பத்தியில் விலகி புதிதாக ஒன்றை தேடும் இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் காண்பது அரிது. அதில் சந்தோஷ் நாராயணன் ஒரு "வைரம்" தான். அவரின் இந்த இசை வித்தைகளுக்கு காரணம் அவருக்கு அமைந்த இயக்குனர்களும், இசையமைக்க அவர்கள் கொடுத்த சுதந்திர தன்மையும் தான். அதனால்தான் அவர் கொண்டாடப்படுகிறார்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சந்தோஷ் நாராயணன்.

Comment

Successfully posted

Super User

exelant job