தேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்

Nov 20, 2020 06:43 PM 3551

திமுகவில், சொந்த கட்சியினருக்கு எந்த அளவுக்கு மதிப்பு வழங்கப்படுகிறது என்பதற்கு, சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணாவே உதாரணம் என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலோர உள்நாட்டு மீனவர்களின் வாரிசுகளுக்கும், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், கடலில் காணாமல் போனவர்களின் வாரிசுகளுக்கும், உள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் உரிமைகளை ஆட்சியில் இருந்தபோது தாரைவார்த்து விட்டு, தேர்தல் நேரத்தில் திமுகவினர் மக்களை சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை என தெரிவித்த அவர், திமுகவில் சொந்த கட்சியினருக்கு எந்த அளவுக்கு மதிப்பு வழங்கப்படுகிறது என்பதற்கு பூங்கோதையே உதாரணம் என்று கூறினார்.

மேலும், குறட்டை விட்டவர்கள் எல்லாம் கோட்டைவிட்டவர்கள் என்பதைப்போல், 17 வருடங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்த போதிலும், எதுவுமே செய்யாமல், தமிழகத்தை இருளில் தள்ளி மக்களின் உரிமைகளை தாரைவார்த்த கட்சி திமுக என்று விமர்சித்துள்ளார். தேர்தல் நேரத்தில் விடியல் என்று கூறி மக்களைச் சென்று திமுகவினர் சந்திதாலும், மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று கூறிய அமைச்சர், தேர்தல் நேரத்தில் மட்டுமே ஸ்டாலின் 7 பேர் விடுதலை குறித்து பேசுவார் என குற்றம்சாட்டியுள்ளார்.

Comment

Successfully posted