பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து மாநிலங்கள் முடிவெடுக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு

Oct 01, 2020 08:05 AM 353

அக்டோபர் 15-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, 5ஆம் கட்ட தளர்வுகளை வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் 50% டிக்கெட்டுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, வர்த்தகக் கண்காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்றுக் கூறியுள்ளது.

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும், பெற்றோரிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி வாங்கிய பிறகே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அதுவரை ஆன்லைன் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Comment

Successfully posted