ஏடிஎம் மிஷினில் விரலை வைத்து பணத்தை திருடிய வாலிபர்

Mar 02, 2019 01:10 PM 772

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்- இது பழமொழி.. கையும் களவுமாக மாட்டும் போது அவர்கள் திருடிய விதத்தை சொல்லும்போது நிச்சயம் பல சமயங்களில் ஆச்சர்யமாக இருக்கும். இங்கேயும் அப்படி ஒரு திருட்டு சம்பவம் தான். ஆனால் வித்தியாசமானது.

இந்த திருட்டு குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்றுள்ளது. அங்கிருக்கும் ஒரு யூனியன் வங்கி கிளையின் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கணக்கும் ஏடிஎம்மில் பணம் மீதம் இருக்கும் கணக்கும் அவ்வப்போது சமமகாமல் இருந்துள்ளது.

மனுஷன் பொய் சொல்லலாம். ஆனால் ஏடிஎம் மிஷின் பொய் சொல்லாது. மிஷின் தான் பணத்தை கொடுக்கிறது என்பது ரீதியாக பேங்க் மேனேஜருக்கு சந்தேகம் வர ஏடிஎம் சிசிடிவி கேமராவை சோதனை செய்தார். அதில் ஒரு நபர் மீது சந்தேகம் வர அவரை பிடித்து விசாரணை நடத்தியது போலீஸ். விசாரணையில் எடிஎம்-மில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார்.

போலீஸ் விசாரணையில் அவர் எவ்வாறு திருடினார் என்பதை சொல்லும்போது அவர் சொன்ன தகவல்கள் ஆச்சர்யமாக இருந்தது. ஏடிஎம்மிற்குள் நுழையும் அவர் ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பாராம். ஆனால் பணம் வருவதற்கு முன்பே பணம் வரும் இடத்தில் விரலை நுழைத்து பணத்தை எடுப்பாராம். இவ்வாறு அவர் ஒவ்வொரு முறையும் அதிகளவு பணம் எடுத்துள்ளார். அவர் எடுத்த பணம் அவர் கணக்கில் கழியாது என்பது கூடுதல் செய்தி. இதுவரை அவர் சுமார் 1.54 லட்சம் ரூபாய் பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகமாக பணம் எடுத்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் ஒவ்வொரு முறையும் குறைந்த அளவிலான பணத்தையே திருடியுள்ளார். 2018ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இவர் இந்த திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளாா். பணம் எண்ணிய அவர் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணுகிறார்.

Comment

Successfully posted