கூகுள் தாய் நிறுவன தலைமை செயல் அதிகாரியானார் சுந்தர் பிச்சை

Dec 05, 2019 08:03 AM 490

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். சுந்தர் பிச்சை கடந்து வந்த பாதை....


நடுத்தரக் குடும்பம், இரண்டே அறைகள் கொண்ட வீடு, டீவி, கார் போன்றவை எல்லாம் எட்டாக் கனியாகத் தோன்றிய காலம். மேற்படிப்பிற்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. இவை எதுவும் சுந்தர் பிச்சையின் இமாலய வெற்றிக்குத் தடையாக இருக்கவில்லை. சென்னையிலிருந்து அமெரிக்கா வரை, தன் வெற்றிச் சுவடுகளை பதித்திருக்கிறார் சுந்தர் பிச்சை. கரக்பூர் ஐஐடி-யில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், 2004-ஆம் ஆண்டு கூகுளில் இணைந்தார். 11 வருட கடின உழைப்புக்கு பலனாக வெற்றி கிடைத்தது.

அனுபவத்தில் மூத்தவர்கள் பலர் இருந்த போதும், 2015-ஆம் ஆண்டு கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. திறமை, மற்ற எல்லாவற்றையும் தோற்கடித்த நாள் அது. அன்று முதல், கூகுள் நிறுவனம், வாடிக்கையாளர் மென்பொருள் உற்பத்தியில் புதிய வேகம் பெற்று இயங்கியது என்றே கூறலாம். இந்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆல்ஃபாபெட் நிறுவனமானது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக உள்ளது. இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 5-ஆவது நிறுவனமாக இது கூறப்படுகிறது.

இதற்கு முன்னர், ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை பதவியில், கூகுள் நிறுவனத்தின் லேரி பேஜ் (Larry Page)-ம், செர்ஜே பிரின் (Sergey Brin)-னும் இருந்து வந்தனர். தற்போது இதன் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கூகுள் நிறுவனத்திற்கு சுந்தர் பிச்சை நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் சிஇஓவாக நியமித்தது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக லேரிக்கும், செர்ஜேவக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நம்மிடையே நேரம், பணி, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, ஒத்துழைப்பு கலாசாரமும் உள்ளது. எனவே நிறுவனத்தை மேலும் நல்ல முறையில் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.

கடிகாரத்தை உங்களது போட்டியாளராக நினையுங்கள். அதை, தொடர்ந்து துரத்துங்கள். அப்போது வெற்றி உங்கள் பின்னால் ஓடிவரும்.
இறுதியாக, மனிதநேயத்தை மீறிய எதுவும் வெற்றியைத் தராது என்பதில் கவனமாக இருங்கள். இது சுந்தர் பிச்சையின் வார்த்தைகள்.

இவரை போன்றே, உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்பு வகித்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, இன்ஃபோசிஸ்(Infosys) நிறுவனத்தின் தலைவரான நாராயணமூர்த்தி( Narayana Moorthi), மைக்ரோ சாஃப்ட்( Microsoft) நிறுவனத்தில் சத்யா நாதெல்லா (Satya Nadella), விப்ரோ (Wipro) நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி (Asim Premji) என அப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. உலகின் வளர்ந்து வரும் தொழிநுட்பங்களுக்கு ஏற்றவாறு, இந்தியாவும் முன்னேறி வருவதையே இவை குறிக்கின்றன.

Comment

Successfully posted