உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று - முதலமைச்சர் பெருமிதம்

Sep 18, 2020 05:09 PM 1239

இந்தியாவின் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்ந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தனியார் பல்கலைக்கழகத்தின் இணையவழி 29-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, உயர்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் பட்டியலிட்டார். அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என்றும், மாணவர்கள் குறைந்த செலவில் தரமான கல்வி பெறுவதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறினார்.

இந்தியாவின் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர், உயர்கல்வி தரவரிசைப் பட்டியலில், இந்திய அளவில் 100 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 18 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். அதிமுக அரசின் சிறப்பான முயற்சியால், தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 49%ஆக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், கொரோனா காலத்திலும், இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்தது தமிழகம் தான் என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, இதன்மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இது, மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்து வேலை தேடும்போது, அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

Comment

Successfully posted