லாபத்துக்காக பல்கலை.யை மூடும் திமுக... முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விளாசல்

Jul 26, 2021 03:39 PM 1598

திமுகவின் அரசியல் விளையாட்டில், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதை அதிமுக பொறுத்துக் கொள்ளாது என்று, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக எச்சரித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், திமுக அரசு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குவதன் நோக்கம் அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இதற்காக செம்மேடு கிராமத்தில் 70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில், திமுக அரசின் புறக்கணிப்பால், பல்கலைகழகம் பழைய தாலுகா அலுவலகத்திலேயே செயல்படுகிறது.

டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகத்துக்கு உரிய நிதி ஒதுக்கவும், பதிவாளரை நியமிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகம், அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைக்கப்படும் என்றும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில் அரசியல் லாபத்திற்காக, டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூட முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் தலைமையில், ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர் ஆகியோர் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்தனர்.

 

Comment

Successfully posted